கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் அடுத்தடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் காலை முதல் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நேற்றைய தினம் 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்த நிலையில், இன்றும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாதிரிப் படம்
சென்னை, நவம்பர் 24: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது வரை 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதோடு, நேற்றைய தினம் அங்கு மிக கனமழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. அதோடு, தாமிரிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அங்கு கடந்த 2023ம் ஆண்டில் இதேபோன்று கனமழை பெய்து, நெல்லை, தூத்துக்குடி மாவட்டமே தண்ணீரில் மூழ்கியது. தற்போது இதுபோன்ற ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அம்மாவட்ட மக்கள் உள்ளனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
அந்தவகையில், கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தூத்துக்குடி, திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்காசி, நெல்லை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுடன், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு:
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை:
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.