ஈரோட்டில் சோக சம்பவம்.. கலெக்டர் கார் மோதி விவசாயி உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!
Erode Collector Car Hit Farmer Died : ஈரோடு மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிரு்த இரு சக்கர வாகனம் மீது மாவட்ட ஆட்சித் தலைவரின் கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மாவட்ட ஆட்சித் தலைவரின் கார் வேகமாக மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வருபவர் கந்தசாமி. இவர், இன்று வியாழக்கிழமை ( அக்டோபர் 22- ஆம் தேதி) அரசுக்கு சொந்தமான தனது காரில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். அப்போது, அதை சாலையில் வெள்ளாங் கோயில் பகுதியில் வசித்து வந்த விவசாயி சண்முகம் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இரு சக்கர வாகனம் மீது ஆட்சியர் கார் மோதல்
அப்போது, எதிர்பாராத விதமாக விவசாயி சண்முகம் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமியின் இனோவா கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சண்முகம் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்சியர், அவரது கார் ஓட்டுநர் ஆகியோர் விவசாயியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்தில் சிக்கிய விவசாயியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!




ஆட்சியர் கார் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விவசாயி சண்முகத்தின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், விவசாயி சண்முகம் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
விவசாயி குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
அங்கு, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து விட்டு மீண்டும் வீடு திரும்பி சென்று கொண்டிருந்த நிலையில், ஆட்சித் தலைவரின் கார் மோதி இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. முன்னதாக, விபத்து நடந்த இடத்தில் பணிகளை முடுக்கி விட்டு விட்டு ஆட்சியர் வேறொரு காரில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த விபத்து உயிரிழப்பால் விவசாயி உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அடுத்தடுத்து சம்பவம்.. விருதுநகரில் சிக்கிய போதை மாத்திரைகள்? தென்காசியை சேர்ந்தவர் அதிரடி கைது!