இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்தனர்.

கோப்புப்படம்
சென்னை, டிசம்பர் 04: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (டிசம்பர் 3, 2025) அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இது தொடர்ந்து, வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்த்த நிலையில், ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. அதோடு, மீண்டும் தெற்கு, தென்மேற்கு நோக்கி நகர தொடங்கியது. அதாவது, சென்ற பாதையிலேயே மீண்டும் திரும்பி வரத் தொடங்கியது. எனினும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த அது, இன்று மேலும் பலவீனமாகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
அதிகபட்ச மழைப்பொழிவு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை எண்ணூர், செங்கல்பட்டில் 15 செ.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு 13 செ.மீ, திருமயம், சென்னை விம்கோ நகர், தாமரைப்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், மணலி புதுநகர், திருக்கழுக்குன்றம், மேடவாக்கம், திருவாரூர், குடுமியான்மலை, இலுப்பூரில் தலா 11 செ.மீ மழையும், சென்னை பள்ளிக்கரணை, மாமல்லபுரம், வடக்குத்து, கேளம்பாக்கம், செங்குன்றம், உளுந்தூர்பேட்டையில் 10 செ.மீ மழையும், தொண்டி, ஒக்கியம் துரைப்பாக்கம், பொன்னேரி, திருவாரூர், கத்திவாக்கம், அம்பத்தூர், பொள்ளாச்சியில் தலா 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு:
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (தித்வா புயல்), காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து, வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்த்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. அதன்பின், கடந்து சென்ற பாதையிலேயே மீண்டும் திரும்பி, தெற்கு, தென்மேற்கு நோக்கி நேற்று நகர தொடங்கியது. அந்தவகையில், நேற்று காலை நிலவரப்படி, புதுச்சேரி நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இன்று, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!
இன்று 6 மாவட்டங்களில் கனமழை:
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிச.9ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.