ஈரோட்டில் தீப்பெட்டி கேட்டதால் கொலை.. குடிபோதையில் நடந்த கொடூர சம்பவம்.. 4 பேர் சிறையில் அடைப்பு!

Erode Murder: ஈரோடு மாவட்டம், மைலம்பாடியில் தீப்பெட்டி கேட்டதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சங்கர் என்ற நபர் 4 பேரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஈரோட்டில் தீப்பெட்டி கேட்டதால் கொலை.. குடிபோதையில் நடந்த கொடூர சம்பவம்.. 4 பேர் சிறையில் அடைப்பு!

மாதிரிப்படம்

Published: 

26 May 2025 07:59 AM

ஈரோடு, மே 26: ஈரோடு (Erode) மாவட்டத்தை மைலம்பாடியில் தீப்பெட்டி தொடர்பாக குடிபோதையில் 4 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பரத், நந்தகோபால், பரத், தினேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, இந்த கொலையானது (Murder) முன்விரோதமாக நிகழ்ந்ததா அல்லது எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவமா என்பது குறித்து ஈரோடு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன நடந்தது..?

கொலை செய்யப்பட்ட சங்கர் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஈரோடு அடுத்த மைலம்பாடி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே பரத், நந்தகோபால், பரத், தினேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரும் ஒன்றாக அமர்ந்து அருந்தியுள்ளனர். அப்போது, இவர்களுக்கு அருகில் மதுபோதையில் இருந்த சங்கர் என்பவர், இவர்கள் 4 பேரை அணுகி சிகரெட் பற்றவைப்பதற்காக தீப்பெட்டியை கேட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அந்த 4 பேரில் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இது முதலில் வாக்குவாதமாக மாறி பின், கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்த மற்றவர்கள் இவர்கள் 5 பேரையும் தடுத்து தனித்தனியே அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து, குடிபோதையில் இருந்த 4 பேரும் மீண்டும் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகே சங்கரை கண்டுள்ளனர். உடனடியாக பரத், நந்தகோபால், பரத், தினேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரும் சங்கரிடம் சென்று, “இன்னும் நீ கிளம்பவில்லையா..?” என்று மிரட்டும் பாணியில் பேசியுள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்த சங்கர், அந்த 4 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த 4 பேரும் சங்கரை நைலான் கயிற்றால் சுற்றி, பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, அங்கிருந்த நபர்கள் சண்டையை தடுத்து சங்கரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பலத்த காயம் ஏற்பட்டதன் விளைவாக சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டவர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 பேரும் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, பரத், நந்தகோபால், பரத், தினேஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.