பழைய ஓய்வூதியத் திட்டம்.. திமுகவின் கண் துடைப்பு நாடகம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
Edappadi Palaniswami Statement: அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை பெரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் இது வெறும் கண் துடைப்பு நாடகம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 10, 2026: உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமானது கடந்த ஜனவரி 1- ஆம் தேதி (வியாழக்கிழமை ) முதல் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு இன்று சனிக்கிழமை (ஜனவரி 10) அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும். இதே போல, அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை பெரும் நபர் உயிரிழந்தால், அவர் பெற்று வந்த ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது வெறும் கண் துடைப்பு நாடகம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் – எடப்பாடி பழனிசாமி:
பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’… pic.twitter.com/vrzt572Ilj
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 10, 2026
இது தொடர்பான அவரது பதிவில், “ பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதுவும் செய்யாமல், அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்கு, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது இந்த விடியா திமுக அரசு.
‘ஒன்றிய அரசு, குன்றிய அரசு’ என்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்’ (Unified Pension Scheme) பெயரை மாற்றிவிட்டு, தற்போது தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளது.\
‘புதிய மொந்தையில் பழைய கள்’:
பழைய ஒய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அரசு ஊழியர்களை இதுவரை ஏமாற்றி வந்த நிலையில், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும். அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிப்பதற்கும், பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ் நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளார் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின். இச்செயல் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்:
எனவே, எதிர்பார்த்தபடி பெரிய மாற்றம் ஏதுமில்லை என்பதை பல அரசு ஊழியர்கள் உணர்ந்திருந்தாலும், இனிப்பு என்ற பெயரில் பொய்யை மூடி மறைத்த சங்க நிர்வாகிகள், புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்வார்கள். அதற்கு வரும் தேர்தலில் திமுக-வை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.