கடலூரில் வேன் மீது ரயில் மோதிய விபத்து.. 13 பேருக்கு பறந்த சம்மன்.. ரயில்வே அதிரடி!

Cuddalore Van Train Accident : கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களிடம் விபத்து குறித்து ரயில்வே விசாரணை குழ விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.

கடலூரில் வேன் மீது ரயில் மோதிய விபத்து.. 13 பேருக்கு பறந்த சம்மன்.. ரயில்வே  அதிரடி!

கடலூர் வேன் - ரயில் விபத்து

Updated On: 

09 Jul 2025 15:58 PM

கடலூர், ஜூலை 09 : கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது (Cuddalore Van Train Accident) பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக 13 பேருக்கு ரயில்வே துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதாவது, ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  அதன்படி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாந்த், சிவகுமரன் ஆகியோருக்கு ரயில்வே துறை சம்மன் அனுப்பி உள்ளது.

13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.   இந்த 13 பேரும் சம்மன்  ஆகும் பட்சத்தில், இவர்களிடம் விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அறியவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

Also Read : கடலூர் பள்ளி வேன் -ரயில் விபத்து: கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கடலூர் ரயில் விபத்து நடந்து எப்படி?

2025 ஜூலை 8ஆம் தேதியான நேற்று காலை கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே பள்ளி வேன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ரயில்வே கேட் அங்கு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, எப்போது போன்று வேன் ஓட்டுநர் சங்கர் வேனை முன்னாக்கி இயக்கி, ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது, வேன் மீது அதிவேகமாக வந்த பயணிகள் ரயில் மோதியுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் வேன் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் வேன் சுக்குநூறாக உடைந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சின்னகாட்டு சாகை மற்றும் தொண்டமாநத்தம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாருமதி (16), செழியன் (15), நிமலேஷ் (12) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2025 ஜூலை 9ஆம் தேதியான இன்று வீடு திரும்பினர்.

Also Read : ரயில் விபத்து: ‘உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணையை ரயில்வே துறை குழு அமைத்து விசாரிக்கிறது. இந்த நிலையில், இந்து விபத்து தொடர்பாக 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.