கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி உள்ளது?
Communist Party Nallakannu Hospitalized: கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 14, 2025: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவிற்கு தற்போது வயது 100 ஆகும். அவரது பிறந்த நாள் டிசம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தவர். அரசியலில் இவரது பங்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
யார் இந்த நல்லகண்ணு?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, தமிழ்நாட்டில் இடதுசாரி அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படுகிறார். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் ஈடுபட்டு வந்த அவர், ஏழை-எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தவர். இந்த சூழலில், வயது மூப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்.. இன்றே கடைசி நாள்..
நல்லகண்ணு தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் எந்த பதவிகளையும் பெரிதாக நாடாமல், கொள்கை அரசியலையே மையமாகக் கொண்டு செயல்பட்டவர் என்ற பெயர் பெற்றவர். எளிய வாழ்க்கை முறையும், நேர்மை, தன்னலமற்ற சேவை ஆகிய பண்புகளும் அவரை பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான தலைவராக உயர்த்தியுள்ளன.
மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதி:
2025 ஆகஸ்ட் மாதம் கீழே தவறி விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.
மேலும் படிக்க: “யார் உண்மையான ரூட் தல?” ரயில் நிலையத்தில் சரமாரியாக மோதிய கல்லூரி மாணவர்கள்.. சென்னையில் பரபரப்பு!!
இந்த நிலையில், தற்போது அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், ஓரிரு நாட்களில் அவர் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.