தமிழகத்தில் ரூ.1,003 கோடியில் கண்ணாடி உற்பத்தி ஆலை…முதல்வர் தொடங்கி வைப்பு…800 பேருக்கு வேலைவாய்ப்பு!
Stalin Inaugurate Glass Manufacturing Plant: காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1,003 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலை மூலம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ரூ.1003 கோடியில் கண்ணாடி உற்பத்தி ஆலை
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில் ரூ.1,003 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: மின்னணு பொருட்களின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி வருகிறது தமிழகத்தில் முதலீடு செய்ய பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் ஆதரவு எப்போதும் வழங்கப்படும். நம்பிக்கையின் காரணமாகவே 4 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளோம்.
ரூ.1003 முதலீட்டில் 800 பேருக்கு வேலை
கொரில்லா கண்ணாடிகளை தயாரிக்கும் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. ரூ. 1,003 கோடி முதலீட்டில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் முதலீடுகள் வருவதற்கு அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து, அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க: பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு.. திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அண்ணாமலை சாடல்..
கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்
உலகத்தரம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை குறிக்கோளாக வைத்திருக்கும் இந்த நிறுவனத்திடம் தமிழக இளைஞர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற குறிக்கோளையும் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கண்ணாடி ஆலைக்காண புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த 17 மாதங்களில் இந்த நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளது.
4 ஆண்டுகளில் தமிழகம் 9 சதவீத வளர்ச்சி
திமுக தலைமையிலான அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட நிலையில், அதில் 87 சதவீத ஒப்பந்தங்களை நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் 14.65 சதவீத பொருட்கள் ஏற்றுமதி அளவில் இந்தியாவில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 41% ஆக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த துறையில் 9 சதவீத வளர்ச்சியே அடைந்துள்ளோம்.
ரூ.440 கோடியில் மின்னணு தயாரிப்பு தொகுப்பு
கிள்ளைப்பாக்கத்தில் ரூ. 440 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுடன் இணைந்து சிப்காட் மின்னனு தயாரிப்பு தொகுப்பு மேற்கொள்ள உள்ளது. இதில், சூரிய ஒளி சார்ந்த கதிரியக்க சோதனை மையம், மின்சாதனங்கள் சோதனை மையம், மின்னணு சான்றிதழ் ஆய்வகம், பிசிசி வடிவமைப்பு, விரைவான மாதிரி தயாரிப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம், தொழிலாளர் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “சட்டத்தை மதிக்காத ஆட்சியை தொடரவிடக்கூடாது”.. நயினார் நாகேந்திரன் சூளுரை!!