வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..
CM MK Stalin Inspection: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 19, 2025: வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் பின்னர் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, தேனி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான அளவில் மழை பதிவாகி வருகிறது. தற்போதுவரை இயல்பை விட 58% அதிக அளவில் மழை கிடைத்துள்ளதாக தென் மண்டல வானிலை இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
கனமழையால் தண்ணீர் தேங்கும் நிலை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நிலைமை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றும் பணிகள், மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 58 சதவீதம் அதிக மழை பதிவு – தலைவர் அமுதா..
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு:
#NorthEastMonsoon தொடங்கி, தமிழ்நாடெங்கும் பரவலாக மழை பெய்து வருவதால், மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன்.
பாதுகாப்பாகத் தங்குவதற்கு முகாம்கள், குடிநீர், உணவு, மருந்து… pic.twitter.com/61QFMUN2wN
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 19, 2025
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அக்டோபர் 19, 2025 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் படிக்க: பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்:
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. டெல்டா பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்ததால் பயிர்கள் சேதமடைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களை கூறி வருகிறார். மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு விரைவாக கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடிகால்கள், மழைநீர் வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தாலும், அங்கு இதுவரை எந்தவித அவசர நிலையும் இல்லை” என தெரிவித்தார்.