சென்னை உலா பேருந்து சேவை…இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது…என்னென்ன அம்சங்கள் உள்ளன!
Chennai Ula Bus Service: சென்னையில் பழைமையான பாரம்பரிய கட்டடங்களை சுற்றி காண்பிப்பதற்காக "சென்னை உலா பேருந்து சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பேருந்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன. எந்த வழித் தடத்தில் பயணிக்க உள்ளது என்பதை பார்க்கலாம்.

சென்னை உலா பேருந்து சேவை தொடக்கம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை சுற்றுலாத்துறை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள பழமையான பாரம்பரிய கட்டிடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக “சென்னை உலா பேருந்து” சேவை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த “சென்னை உலா பேருந்து” சேவையை கடந்த ஜனவரி 14- ஆம் தேதி ( புதன்கிழமை) அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்தானது, இன்று சனிக்கிழமை ( ஜனவரி 17) முதல் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை சுமார் 10 மணி அளவில் “சென்னை உலா பேருந்து” சேவை தொடங்கப்பட்டது.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
இந்த பேருந்து சேவையானது வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், இதே போல, வார நாட்களான திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த பேருந்தானது அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தில் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகளும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க: தமிழகம் – மேற்கு வங்கம் இடையே 3 அமிர்த் பாரத் ரயில் சேவைகள்.. இன்று முதல் தொடக்கம்.. எந்த வழித்தடங்களில்?
பழைமையான கட்டடங்களை சுற்றி காண்பிப்பதற்காக
சென்னைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு நகர் முழுவதும் உள்ள பாரம்பரியமான பழைய கட்டிடங்களை சுற்றி காண்பிப்பதற்காக இந்த “சென்னை உலா பேருந்து” சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில், 5 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பேருந்தானது முந்தைய காலத்தில் இருந்தது போல சிகப்பு நிற வண்ணத்துடன் முன்பகுதியில் மஞ்சள் நிற வண்ணத்துடன், பேருந்தின் முன் பகுதியில் சென்னை உலா பேருந்து என்ற பலகையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உலா பேருந்தில் உள்ள அம்சங்கள்
மேலும், பேருந்தின் ஜன்னல்கள், அதில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள், பேருந்தின் கதவுகள், முன்புற ஒளி விளக்குகள் உள்ளிட்டவை பழைய பேருந்துகளில் இருந்தது போலவும், சுற்றுலா பயணிகளை கவர்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சென்னை பல்லவன் இல்லம் வரை சுமார் 16 வழித் தடங்களில் பயணிக்க உள்ளது. இந்த பயணத்தின் போது, வழித் தடங்களில் உள்ள பழைமையான, பாரம்பரியமான கட்டடங்களை சுற்றுலாப் பயணிகள் ரசித்துக் கொண்டே செல்லலாம்.
மேலும் படிக்க: தை அமாவாசை…ராமேஸ்வரத்துக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!