பல்லாவரம் ரயில் நிலையத்தில் பீதி: நடைமேடையில் உரசிய ஏசி ரயில்..!
Pallavaram Train Incident: பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஏசி மின்சார ரயில் நடைமேடையில் உரசியதால் ஏற்பட்ட சத்தத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் நடைமேடையை சீரமைத்தனர். இதனால் செங்கல்பட்டு-பீச் ரயில் பாதையில் கணிசமான தாமதம் ஏற்பட்டது.

பல்லாவரம் ரயில் நிலைய நடைமேடையில் உரசிய ஏசி ரயில்
சென்னை மே 26: சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் (Chennai Pallavaram railway station) ஏசி மின்சார ரயில் (AC electric train) நிலைய நடைமேடையில் உரசியதால் திடீரென சத்தம் எழுந்தது. இந்த சத்தம் பயணிகளை அதிர்ச்சிக்கும் பயத்திற்கும் உள்ளாக்கியது. சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் நடைமேடையை உடைத்து சீரமைத்தனர். இந்த கோளாறு காரணமாக செங்கல்பட்டு – பீச் ரயில் பாதையில் தாமதம் ஏற்பட்டது. பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் திண்டாடினர். சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் ரயில் நிலையத்தில் பீதி: நடைமேடையில் உரசிய ஏசி ரயில்
சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் திடீரென கேட்ட சத்தத்தால் பயணிகளிடையே கடும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சென்னை பீச்சிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ஏசி மின்சார ரயில், வழக்கம்போல் பல்லாவரத்தில் நின்றபோது திடீரென படபடவென சத்தம் எழுந்தது. பயணிகள் விபத்து நடந்துவிட்டதோ என அச்சத்தில் உறைந்தனர். பின்னர் ரயில் நிலைய நடைமேடையில் ரயில் உரசியதால் இந்த சத்தம் ஏற்பட்டது என்பது தெரியவந்தது.
ஊழியர்கள் அதிவேகத்தில் நடவடிக்கை
சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, சுத்தியலால் நடைமேடையை உடைத்து சீரமைத்தனர். சுமார் 30 நிமிடங்கள் பணிகள் நீடித்து, பின்னர் ரயில் வழக்கமாக இயக்கப்பட்டது. இது ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கி ஒரே மாதத்தில் சம்பவம் நடந்ததால் பயணிகள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு
அந்நேரத்தில் பல்லாவரத்தில் அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால், சென்னையின் முக்கிய புறநகர் மின்சார சேவைகள் தாமதமடைந்தன. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்து பீச் நோக்கி வந்த ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
ரயில் நிலையங்களில் பயணிகள் பெரும் சிரமம்
கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், நுங்கம்பாக்கம், எக்மோர் போன்ற நிலையங்களில் பயணிகள் ரயிலை காத்திருந்து திண்டாடினர். செல்ல வேண்டிய நேரம் குறைய, சிலர் மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளுக்குச் சென்றனர். விடுமுறை நாளாக இருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தாலும், இது வாரநாட்களில் நடந்திருந்தால் மேலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் விசாரணை
இந்த சம்பவம் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பராமரிப்பு செய்யப்பட்டு துவக்கப்பட்ட ஏசி ரயில் நடைமேடையில் உரசியது எப்படி என்பதைப் பற்றிய தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் பயணிகள் மத்தியில் இது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.