+2 சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி… மாணவி எடுத்த விபரீத முடிவு.. நாமக்கல்லில் அதிர்ச்சி!

Namakkal CBSE 12th Student Suicide : நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் கணக்கு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், மன உளைச்சலில் இருந்த மாணவி, வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

+2 சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி... மாணவி எடுத்த விபரீத முடிவு.. நாமக்கல்லில் அதிர்ச்சி!

மாதிரிப்படம்

Updated On: 

22 May 2025 08:57 AM

நாமக்கல், மே 22 : நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணக்கு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தீபா. இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 17 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். இதில், 17 வயது மகள் திருச்செங்கோட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்தார். 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 2025 மே 13ஆம் தேதி வெளியானது. இதில் அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவி, கணக்கு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.

+2 தேர்வில் தோல்வி

3 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தோல்வி அடைந்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாகவே, மன உளைச்சலில் மாணவி இருந்துள்ளார்.  அவரது பெற்றோர்களும் ஆறுதல் கூறி இருக்கின்றனர். இருப்பினும், மாணவி  மன  உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை மாணவி குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட, மகன் சரவணன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து, பெற்றோர் உடனே மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த மாணவி, 2025 மே 21ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   இதனை அடுத்து, மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில், மாணவியின் கண்களை தானமாக வழங்கவும் பெற்றோர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

சிபிஎஸ்இ மாணவி எடுத்த விபரீத முடிவு

ஒரு பாடத்தில் தேல்வி அடைந்ததால், 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அண்மையில் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வி நாடு முழுவதும் 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.   முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்வு முடிவுகள் பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் ஒருநாள் முன்பு மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அந்த மாணவி 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா 413  மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.  இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)