பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு… எஸ்.ஐ. இசக்கி ராஜா உள்பட 3 போலீசாருக்கு செக் வைத்த தென்காசி எஸ்.பி.!
Tenkasi Crime: தென்காசி அருகே ஆலங்குளம் பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்பட 3 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 போலீசார் மீது வழக்கு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் மணிகண்டன் (32 வயது). இவர், மருதம்புத்தூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்பட 3 போலீசார் மருதம்புத்தூர் காட்டுப்பகுதிக்கு சாதாரண உடையில் சோதனை இட சென்றனர். அப்போது, அங்கிருந்த பனை மரத்தில் பானை வைக்கப்பட்டிருந்தது. உடனே, அந்த மரத்தின் உரிமையாளரான மணிகண்டன் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மணிகண்டனை போலீசார் பனைமரம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, பனை மரத்தின் மீது ஏறி பானையை இறக்குமாறு மணிகண்டனிடம் போலீசார் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மண்டை உடைப்பு
ஆனால், இதற்கு மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், மணிகண்டனுக்கும், சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் கிடந்த மட்டையால் இசக்கி ராஜாவை மணிகண்டன் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே, தற்காப்புக்காக சப் இன்ஸ்பெக்டர் இசைக்கு ராஜா தனது துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி சுட்டார்.
மேலும் படிக்க: நெல்லையில் இன்று விஜய் பிரப்புரை.. 4 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல்.. ரோடு ஷோ செல்ல திட்டம்..
பனை தொழிலாளி மீது 4 குண்டுகள் பாய்ந்தது
இதில், 4 குண்டுகள் மணிகண்டனின் கால்களை துளைத்து சென்றன. இதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பனை ஏறும் தொழிலாளர்கள் ஆலங்குளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்பட 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எஸ்ஐ உள்பட 3 போலீசார் மீது வழக்கு
இதனிடையே, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், தென்காசி டிஎஸ்பி அதியமான் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் பனை ஏறும் தொழிலாளி ஆகியோரை பார்த்து விசாரித்தனர். இந்த நிலையில், ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக ஆலங்குளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சாத்தான்குளம் எதிரொலி: லத்திக்கு பூட்டு, காவல்துறை விசாரணைக்கு புதிய விதி..!