எத்தனை நாட்கள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..
Tamilisai Soundararajan: தமிழ்நாடு முதலமைச்சர் கோவையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றாலே அது ‘பொய் ஒப்பந்தம்’ என்று சொல்லலாம். முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சி தான் திமுக அரசு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 26, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்வில் தமிழ்த்தாய் தவிர்க்கப்பட்டது தொடர்பாக பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இதையே பாஜக அல்லது பிற கட்சிகள் செய்திருந்தால், “தமிழுக்கு எதிரானவர்கள்” என போர்கொடி தூக்கியிருப்பார்கள். ஆனால் இன்று ராமர் கோவிலில் கொடியை ஏற்றிய பாரத பிரதமர் தமிழ்நாட்டின் உத்தரமேரூரில் உள்ள கல்வெட்டு குறித்து பேசியுள்ளார். இதிலிருந்து யார் தமிழ் பற்றாளர் — பிரதமர் மோடியா? இல்லையெனில் தமிழ்த்தாய் வாழத்துவும் பாடாத திமுக அரசா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 25, 2025 அன்று கோவை மாவட்டத்தில் 28 கோடி ரூபாய் மதிப்பில், 45 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த செம்மொழிப் பூங்காவில் சுமார் 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 200-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்!!
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கோவையில் TN Rising என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் 43,844 கோடி ரூபாய் முதலீட்டில், 1,79,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திமுக ஆட்சியில் போடப்பட்டது எல்லாமே பொய் உணர்வு ஒப்பந்தங்கள்:
இந்த சூழலில், இந்த நிகழ்வுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்: தமிழ்நாடு முதலமைச்சர் கோவையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றாலே அது ‘பொய் ஒப்பந்தம்’ என்று சொல்லலாம். ஃபாக்ஸ்கான் நிறுவனம் தென் கொரியாவை சேர்ந்த நிறுவனம் வருவதாக கூறினர், ஆனால் வரவில்லை.
ஒரு லட்சம் கோடி மதிப்பில் கூகிள் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்து, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என கூறினர் — அது கூட நடக்கவில்லை. இதைவிடப் பொய் எப்படி சொல்ல முடியும்? எனவே, முற்றிலும் தோல்வியடைந்த ஆட்சி தான் திமுக அரசு,” என கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்:
மேலும், “2026 நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைவது நிச்சயம். வாரிசு அரசியலுக்கு 2026-இல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் — பாடங்களை ஒழுங்காக படிக்கிறாரோ இல்லையோ — உதயநிதிக்காக பாடல்களை படிக்கிறார். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அதனை அகற்றுவது நமது கடமை. அதற்கான முதல் படி — வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தான்,” என குறிப்பிட்டார்.