போகிப் பண்டிகை: இதையெல்லாம் எரிக்காதீங்க.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!

bhogi pongal: போகிநாள் அன்று பழைய பொருட்களோடு சேர்த்து பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள், காகிதம் உள்ளிட்ட பலவற்றை எரிப்பது அதிகரித்துள்ளது. அதனால், அவற்றை தவிர்த்து சுற்றுச் சூழலை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

போகிப் பண்டிகை: இதையெல்லாம் எரிக்காதீங்க.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!

போகிப் பண்டிகை: இதையெல்லாம் எரிக்காதீங்க

Published: 

09 Jan 2026 16:08 PM

 IST

சென்னை, ஜனவரி 09: போகிப்பண்டிகை கொண்டாடும்போது பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச் சூழலை பாதுகாக்குமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழர் திருநாளின் துவக்கத்தை அறிவிக்கும் பொங்கலின் முதல் நாளாகக் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை ஆகும். இந்த நாளில் வீட்டைச் சுத்தம் செய்து, பழுதடைந்த அல்லது பயனற்ற பொருட்களை அகற்றி, புதிய ஆண்டை நலமும் வளத்துடனும் வரவேற்கும் செயல் நிகழ்கிறது. இயற்கைக்கு நன்றி கூறும் அறுசுவை உணர்வும், குடும்பத்தாருடன் மகிழ்ச்சியை பகிரும் பண்பும் இந்த பண்டிகையின் அழகாகும்.

மேலும் படிக்க: பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?

சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத போகிப்பண்டிகை:

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, நமது முன்னோர்கள் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையை கொண்டாடி வந்தனர். இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீ வைத்துக் கொளுத்துவதன் மூலம் காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் இல்லாமல் விழா கொண்டாடப்பட்டு வந்தது.

ரப்பர், டயர், டியூப் எரிப்பு:

ஆனால், இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்போது போகிநாள் அன்று பழைய பொருட்களோடு சேர்த்து பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், டயர், டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள், காகிதம் உள்ளிட்ட பலவற்றை எரிப்பது அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசு அதிகரிப்பதோடு, எரியும் பொருட்களால் எழும் அடர்ந்த புகை விமான வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

விபத்து, உடல்நலக்குறைவு அபாயம்:

மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு காட்சி குறைவு காரணமாக சிரமங்கள், விபத்து அபாயங்கள் அதிகரிக்கின்றன. புகை காரணமாக மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் பொதுமக்களை பாதிக்கின்றன. இந்த நிலையை கண்காணிக்க, போகிநாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மொத்தம் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத் தரம் கண்காணிப்பு, காற்று மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ரூ.3000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு… ரேஷன் கடைகளில் இன்று விநியோகம் தொடக்கம்..

இயற்கையுடன் இணைந்து கொண்டாடவும்:

எனவே இந்த ஆண்டும், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், ரப்பர், டயர், டியூப் போன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்காமல், இயற்கைக்கு உகந்த முறையில் போகிப்பண்டிகையை கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?
இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவிருக்கும் போட்டிகள் - முழு விவரம் இதோ
மும்பையில் தீவிரவாத தாக்குதல்? வெளியான அதிர்ச்சி தகவல்
வட இந்தியாவில் கடும் குளிர்... தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை - முழுமையான வானிலை நிலவரம் இதோ