“சென்னையும் அடுத்த டெல்லியாக மாறிவிடக்கூடும்”.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
Chennai High Court: பசுமைக்கு வழிவகுக்கும் “ஈகோ-பார்க்” நிறுவுவது நல்ல முயற்சி என்றும் அதிக மழை நீரை சேமிப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும், காற்றின் மாசுபாடு குறையும், சுவாச நோய் குறையும் என்று கூறிய நீதிமன்றம், நகர்ப்புற வளர்ச்சியில் இத்தகைய பசுமைத் திட்டங்கள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கிண்டி ரேஸ் கிளப், சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, டிசம்பர் 03: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்புக்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டிருந்த நிலத்தை தமிழக அரசு மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த பரப்பளவில் மழைநீரை சேமிக்கும் நான்கு பெரிய குளங்கள் மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கும் திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம், நில குத்தகை ரத்து செய்யப்பட்டதை தவறு எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையில், தனி நீதிபதி, “தற்போதைய நிலைமையே தொடர வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார். இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு, அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக முக்கிய உத்தரவு பிற்பித்துள்ளது.
மேலும் படிக்க: அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
நீதிமன்றம் கூறிய முக்கிய அம்சங்கள்:
கடந்த 2015ம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள், உடமை சேதங்கள் ஆகியவை இன்றும் மறக்க முடியாதவை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த வருடங்களிலும் பல தடவைகள் மழையால் நகரம் முடங்கியதை நினைவுகூர்ந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மழைநீரை சேமித்து, வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையிலான திட்டங்கள் மிகவும் அவசியம் என்றனர். அரசு அமைக்க நினைக்கும் குளங்கள் மற்றும் பசுமைப்பூங்கா, சுற்றுச்சூழல் சமநிலையை பேணும் முயற்சி மற்றும் காற்று தரத்தை மேம்படுத்தும் முயற்சி என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையும் அடுத்த டெல்லியாக மாறிவிடக்கூடும்:
காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; பொதுமக்கள் உடல் நலத்தில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் மிகப் பெரிய மருத்துவப் பிரச்சினை என்றும் கூறினர். அதோடு, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை குறிப்பிட்டு, சென்னை நகரும் அடுத்த டெல்லியாக மாறிவிடக் கூடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்திய அரசமைப்பின் அட்டவணை 39(b) படி, நகர்ப்புற நிலைகள், குடியிருப்பு நிலைகள் பொதுமக்களின் நலனுக்காகவே பயன்பட வேண்டும்; தனிமனித அல்லது வர்த்தக பொருட்களுக்காக அல்ல என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பட்ட அவர்கள், டெல்லி செய்த தவறுகளை சென்னையும் செய்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க:2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!
சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும் என்று கூறி, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர்.