வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Weather Update: வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் ஆகஸ்ட் 13, 2025 தேதியான இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Aug 2025 14:52 PM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 13, 2025: ஆகஸ்ட் 13 2025 தேதியான இன்று காலை 5:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா பகுதிகளை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 13 2025 தேதியான இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14, 2025 தேதியான நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, இடையப்பட்டி (மதுரை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 3, உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பெருந்துறை (ஈரோடு), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: தொடர் போராட்டம்.. தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மிதமான மழை தொடரும்:

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 2025 முதல் ஆகஸ்ட் 19 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் பதிவான மழை:


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. குறிப்பாக தெற்கு சென்னை மற்றும் ஓஎம்ஆர் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பதிவு இருந்தது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆகஸ்ட் 12 2025 தேதியான நேற்று ஓஎம்ஆர் கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோளிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவானது.