சிறை நட்பு.. பக்கா ஸ்கெட்ச்.. அர்ச்சகர் வீட்டில் திருடிய 8 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றிய குமாரின் வீட்டில் 107 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் சந்தித்த இருவர், குமார் மரணத்திற்குப் பின் வீடு காலியாக இருப்பதை அறிந்து கொள்ளைத் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறை நட்பு.. பக்கா ஸ்கெட்ச்.. அர்ச்சகர் வீட்டில் திருடிய 8 பேர் கைது!

திருட்டில் ஈடுபட்டவர்கள்

Updated On: 

21 Aug 2025 07:17 AM

தூத்துக்குடி, ஆகஸ்ட் 21: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்த குமார் என்பவர் வீட்டில் 107 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் உலக புகழ் பெற்றது. இந்தப் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழாவிற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். அது மட்டுமல்லாமல் தினந்தோறும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து இருக்கும்.

பூட்டிய வீட்டில் நடந்த கொள்ளை

இப்படியான நிலையில் இந்த கோயிலில் குமார் பட்டர் என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வந்தார் இவர் தனது மனைவி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயிலின் பின்புறம் இருக்கும் கீழ மலையான் தெருவில் வசித்து வந்தார். இதற்கிடையில் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2025 ஜூன் 16ம் தேதி குமார் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகவும் வருத்தத்தில் இருந்த அவரது குடும்பத்தினரை உறவினர்கள் அழைப்பின் பேரில் வீட்டை பூட்டி விட்டு திருநெல்வேலி இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு பிரியா மற்றும் குழந்தைகள் சென்று விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி குலசேகரப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டிற்கு பிரியா வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 107 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக குலசேகரப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார்.

Also Read: ஆள் இல்லாத நேரத்தில் திருட்டு.. முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் வீட்டில் கைவரிசை..!

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வீட்டில் திருடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெயில் நட்பு.. பக்கா ஸ்கெட்ச்

அதன்படி மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மரிய யோசுவான், குலசேகரப்பட்டினம் தியாகராஜபுரத்தை சேர்ந்த பட்டுதுரை, சின்னமருது, கச்சேரி தெருவை சேர்ந்த சின்னதுரை, இசக்கி முத்து, தூத்துக்குடி மீள விட்டான் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, மறக்குடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் ஒரு பெண் ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது சின்னதுரை பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்துள்ளார். அதே சிறையில் மாரிமுத்துவும் இருந்துள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையில் அர்ச்சகர் குமார் இறந்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற தகவல் சின்னத்துரைக்கு தெரிய வந்தது.

Also Read: அதிகாலையில் வந்த 3 நபர்கள்.. வீட்டில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை!

கண்டிப்பாக போட்டிய வீட்டில் பணம், நகை இருக்கும் என நினைத்த சின்னதுரை அதனை எப்படியாவது திருட வேண்டும் என மாரிமுத்துவிடம் கூறியுள்ளார். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி அதில் பட்டுதுறை, சின்ன மருது உள்ளிட்ட 5 பேரையும் சேர்த்துள்ளனர்.

திட்டமிட்டபடி 7 பேரும் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி குமார் வீட்டுக்கு சென்று அங்கிருந்து நகைகளை திருடி சென்றனர். ஆனாலும் அவர்களுக்கு பெரிய அளவில் திருப்தி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மீண்டும் ஆகஸ்ட் 10ஆம் தேதி குமார் வீட்டுக்குள் புகுந்து ஒட்டுமொத்தமாக 107 பவுன் நகைகள், வைரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.