அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
Admk Former Ministers: அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு 6 முன்னாள் அமைச்சர்கள் தாவ தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தலை வலியாக மாறி உள்ளது. அவர்கள் யார் என்பதை பார்க்கலாம் .

தவெகவில் இணையும் அதிமுக புள்ளிகள்
அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த செங்கோட்டையன் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டை பையில் வைத்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகி எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். அது மட்டும் இன்றி அதிமுகவிலிருந்து 6 முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல தயாராக இருப்பதாக மிகப்பெரிய குண்டை வீசி உள்ளார். அவர் வீசிய குண்டு தான் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
கட்சி விட்டு கட்சி தாவும் கலாசாரம்
கடந்த 1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த பிறகு அதிமுகவின் தீவிர விசுவாசிகள் என்று கூறப்பட்டவர்கள் கும்பல் கும்பலாக திமுகவில் இணைந்தனர். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து திமுகவுக்கும் இடம் பெறும் கலாச்சாரம் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் அதிமுகவை ஒருங்கிணைக்க போவதாக போர் முழக்கமிட்ட செங்கோட்டையன் கடந்த 27 -ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும் படிக்க: பாமக உரிமை கோரல் வழக்கு…அன்புமணிக்கு வந்த குட் நியூஸ்!
அதிருப்தி பட்டியல் தயார் செய்யும் செங்கோட்டையன்
முதல் முறையாக தமிழக வெற்றி கழகத்தில் மூத்த அரசியல்வாதி வந்திருப்பதால் அந்த கட்சியினர் வட்டாரத்தில் உற்சாகம் பொங்கி உள்ளது. கட்சியில் இணைந்ததோடு அதிமுகவில் இருந்து மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று கூறினார். அந்த கையோடு அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என இரண்டாக பிரித்து பட்டியலை செங்கோட்டையன் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
யார் அந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்
அந்த பட்டியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் அடையாளங்கள் கசிந்துள்ளன. இதில், ஊர் பெயரை பெயருடன் வைத்திருக்கும் முக்கிய புள்ளி, நீண்ட நாட்களாக அதிமுகவில் வளர்ச்சியே காணாத முன்னாள் பெண் அமைச்சர், சமீபகாலமாக மைக் கைக்கு கிடைக்காத முன்னாள் அமைச்சர், டெல்டாவின் ட்ரீட்மென்ட் புள்ளி, கடை கோடியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லங்கத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர், விஜயகாந்த் படம் டைட்டில் புள்ளி, முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் என இவர்களை தவிர வேல் பிரமுகர் செல்ல மாணவர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
ரகசிய பேச்சுவார்த்தையில் இறங்கிய குழு
இவர்களிடம், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நபர்களை எடப்பாடி பழனிசாமி செமத்தியாக கவனித்த நிலையில், அடுத்த ஆண்டும் அது போன்ற கவனிப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், வரும் ஜனவரி மாதத்துக்குள் அதிமுகவிலிருந்து ஆறு முன்னால் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வருவார்கள் என்று பனையூர் வட்டாரங்கள் அடித்து கூறுகின்றனர்.
மேலும் படிக்க:எஸ்ஐஆர் பணி…தமிழகத்தில் 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு?