Diwali 2025: மக்களே ரெடியா! – தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுவாக வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து சாதனங்களில் ரயில் தான் அவர்களின் முதல் தேர்வாக உள்ளது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், நேர மேலாண்மை உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்ள அதிகளவில் விரும்புகிறார்கள். ஆனால் அவற்றில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பான விஷயமாக மாறி விட்டது என சொல்லலாம். பயணிகள் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. முன்பு 120 நாட்களாக இருந்த நடைமுறை தற்போது பொதுமக்களின் கோரிக்கைக்காக 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இதனால் முந்தைய வாரத்தின் சனி, ஞாயிறு சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படியான நிலையில் பெரும்பாலனவர்கள் 2025, அக்டோபர் 17ம் தேதியான வெள்ளிக்கிழமையே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
Also Read: த.வெ.க மதுரை மாநாடு.. அவசர மருத்துவ சேவைக்காக ட்ரோன் ஏற்பாடு..




ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு ரயில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் டிக்கெட் முன்பதிவுக்காக அதிகாலை முதலே ரயில் நிலையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். மேலும் ஐஆர்சிடிசி மற்றும் ரயில் ஒன் செயலி மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இருக்கை வசதி, சாதாரண படுக்கை, 3 டயர் ஏசி, 2 டயர் ஏசி, 1 டயர் ஏசி என பல பயண கட்டண முறைகள் உள்ளது.
எந்த தேதி செல்ல எந்த தேதியில் முன்பதிவு செய்யலாம்?
அதன்படி அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் ஆகஸ்ட் 19ம் தேதியும், அக்டோபர் 19ம் தேதி ஞாயிற்றுகிழமை ஊருக்கு போகிறவர்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதியும், அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகையன்று ஊருக்கு செல்ல விரும்புகிறவர்கள் ஆகஸ்ட் 21ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீபாவளி பண்டிகையன்று சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்புபவர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Also Read: அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை..
அதுமட்டுமல்லாமல் இந்த முறை 5 நாட்களுக்கு முன்பிருந்தே சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் எனவும், அதற்கான அறிவிப்பு முறைப்படி அக்டோபர் மாத முதல் வாரத்தில் வெளிவரும் எனவும் ரயில்வே வட்டார அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.