Virat Kohli’s Favorite Song: இந்தியும் இல்லை! பஞ்சாபியும் இல்லை.. இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த விராட் கோலி!
Virat Kohli Loves This Tamil Song: விராட் கோலி தனது பிடித்த பாடல் என தமிழ் பாடல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், "நீ சிங்கம் தான்" என்ற பத்து தல பட பாடலை விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் சினிமா இசையின் பிரபலத்தை உலகளவில் வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார்கள். சமீப காலமாக, தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்கள் அவர்களது உணவுமுறை, உடற்பயிற்சி, பிடித்த திரைபடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்கிறார்கள். இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) தான் சமீபத்தில் அதிகமுறை லூப் முறையில் கேட்கும் பாடல் என ஒரு தமிழ் பாட்டை குறிப்பிட்டு இருந்தது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது, விராட் கோலி டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்தி பாட்டு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், நீண்ட காலமாக பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் என்பதால் கன்னடத்தை சேர்ந்த ஏதேனும் சொல்லுவார் என்று நினைத்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இத்தகைய பதிலை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி அதிகம் கேட்கும் தமிழ் பாடல்:
View this post on Instagram
ஐபிஎல் 18வது சீசன் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுகளை நெருங்கிவிட்டது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் வீரருமான விராட் கோலி, ஆர்சிபி அணிக்காக 18 ஆண்டுகளாக கேப்டனாகவும், ஒரு வீரராகவும் விளையாடி வருகிறார். சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி பற்றிய சிறப்பு வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில், விராட் கோலியிடம் உங்களுக்கு பிடித்த பாடல் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது.
விராட் கோலியை போல் சக வீரர்களிடம் கேட்கப்பட்ட இதே கேள்விக்கு ஒரு சிலர் பஞ்சாப் மற்றும் இந்தி பாடல்களை கேட்பதாக தெரிவித்தனர். ஆனால், விராட் கோலி சற்றும் யோசிக்காமல் சட்டென தனது மொபைல் பிளே லிஸ்டில் இருந்து, இந்த பதிலை சொன்னால் ஷாக் ஆவீர்கள் என்று தெரிவித்து, தமிழ் பாடலான ’நீ சிங்கம் தான்’ பாடலை ஒலிக்க செய்தார். மேலும், இந்த பாடலைதான் நான் அதிக முறை கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
நீ சிங்கம் தான்:
Nee singam dhan @imVkohli ❤️🔥🦁 https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
’நீ சிங்கம் தான்’ என்ற தமிழ் பாடல் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலாகும். இந்த பாடலுக்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது ஆர்சிபி வெளியிட்ட இந்த காணொளியை ரீ-ட்வீட் செய்துள்ள நடிகர் சிலம்பரசன், “விராட் கோலியை நீ சிங்கம் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.