Sri Lanka vs Bangladesh ODI: கிரவுண்டுக்குள் புகுந்த பாம்பு.. இலங்கை – வங்கதேச ஒருநாள் போட்டியில் பரபரப்பு..!
Snake on Cricket Field: இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் போது மைதானத்தில் 6 அடி நீள பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அணி 244 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் 167 ரன்களுக்கு சுருண்டது. சரித் அஸ்லங்கா 106 ரன்கள் எடுத்தார்.

இலங்கை Vs வங்கதேசம்
இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இரு அணிகளும் அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகளில் (Sri Lanka vs Bangladesh 1st ODI) விளையாடி வருகின்றனர். இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று அதாவது 2025 ஜூலை 3ம் தேதி ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் (R.Premadasa Stadium, Colombo) நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேச அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டிக்கு நடுவில், 6 அடி நீளமுள்ள பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, இரு நாட்டை சேர்ந்த வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக யாருக்கும் எந்தவிதமாக ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் அனைவரும் ஆட்டத்தை நிறுத்தினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிஸாங்க ரன் எதுவும் இன்றியும், நிஷான் மதுஷ்கா 6 ரன்களில் அவுட்டாகினர். இந்த மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் (45) ஒரு நல்ல இன்னிங்ஸை விளையாடினார். இதை தொடர்ந்து, கேப்டன் சரித் அஸ்லங்கா 123 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 244 ரன்கள் எடுத்தது.
6 அடி நீளமுள்ள பாம்பு:
#snake #Cricket pic.twitter.com/Y5KMfE94aZ
— ABHISHEK PANDEY (@anupandey29) July 3, 2025
வங்கதேச அணியின் இன்னிங்ஸின் 3வது ஓவரின் போது 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வீரர்கள் விளையாடும் மைதானத்திற்குள் நுழைந்தது. இது அங்கிருந்த கேமராக்கள் அனைத்திலும் பதிவாகியுள்ளது. இந்தப் பாம்பு தரையில் ஊர்ந்து சென்று மைதானத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்ததால், போட்டியை சிறிது நேரம் நிறுத்த வேண்டியிருந்தது. இதற்கு முன்பும் பல பாம்புகள் இலங்கையில் உள்ள ஸ்டேடியங்களுக்குள் நுழைந்து நாம் பார்த்திருப்போம். சில நாட்களுக்கு முன்பு கூட இலங்கையில் ஒரு போட்டியின் போது, ஒரு பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் ஒரு பாம்பை பிடித்த காட்சியும் கேமராவில் பதிவானது.
167 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்:
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர் தன்ஜித் ஹசன் 62 ரன்களும், கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ 23 ரன்களும் எடுத்தனர். இதனால், வங்கதேசம் 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. ஆனால் நஸ்முல் ரன் அவுட் ஆன பிறகு, முழு அணியும் தொடர்ச்சியான சரிவை சந்தித்தது. 100 ரன்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்திருந்த வங்கதேச அணி 125/9 ஆனது. கடைசி நேரத்தில், ஜாகர் அலி சிறிது நேரம் போராடி அரைசத இன்னிங்ஸை (51) விளையாடினார், ஆனால் அது போதுமானதாக இல்லை.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 5 சனிக்கிழமை நடைபெறும். தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும்.