Mohammed Shami: உண்மையான ரசிகர் ட்ரோல் செய்ய மாட்டார்கள் – முகமது ஷமி!
Indian Cricket Team: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான அவமரியாதையான கேலி, கிண்டல்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் போட்டிகளின் போது இது அதிகமாக இருப்பதாகவும், உண்மையான ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

முகம்மது ஷமி
உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபோதும் கிண்டல், கேலி செய்ய மாட்டார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த ஷமி இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். ஆனால் காயம் காரணமாக ஃபார்மின்றி தவித்து வரும் அவர் மீண்டும் அணியில் இடம் பெற உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடத் தயாராகி வருகிறார். இப்படியான நிலையில் கிரிக்கெட் வீரர்கள் ஒரு போட்டியில் நன்றாக செயல்பட்டால் அதற்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டும், சரியாக விளையாடாவிட்டால் அதற்கு எதிர்வினைகளையும் பெறுவது வழக்கமாக உள்ளது. அதுவும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அளவுக்கு மீறி வீரர்கள் மீதான கேலி, கிண்டலை அதிகமாக்கியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானுடன் விளையாடினால் அதிகமாகும்
அப்படியான ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், இஸ்லாமிய கிரிக்கெட் வீரர்கள் அதிகமாக குறி வைத்து தனிப்பட்ட வகையில் விமர்சிக்கப்படுகிறார்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷமி, சில சமயங்களில் அது நடக்கிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடும்போது இன்னும் அதிகமாக இருக்கிறது என வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் இதுபோன்ற விமர்சனங்களில் நான் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை.
இதையும் படிங்க: 36 ரன்களின் சுருண்ட வரலாறு! டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் டாப் 10 குறைந்த ஸ்கோர் லிஸ்ட்!
காரணம் எனக்கென்று ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒரு இயந்திரம் கிடையாது. ஒரு ஆண்டு முழுவதும் நான் கடினமாக உழைத்தால், சில நேரங்களில் நான் தோல்வியடைவேன், சில நேரங்களில் வெற்றி பெறுவேன். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்களின் விருப்பம் என்று ஷமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள் என்றால், இதுபோன்ற எல்லா விமர்சனங்களையும் மறந்து விடுவீர்கள். போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதும், வெற்றி பெறுவதும் தான் மிகவும் முக்கியமானதாகி விடும். இதுபோன்ற நேரங்களில் நான் சமூக ஊடகங்களில் அதிகம் நேரம் செலவிட மாட்டேன். நீங்கள் விளையாடும்போது இதுபோன்ற விஷயங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்.. தடுத்தது போதும் என முடிவு.. ஓய்வை அறிவித்தார் புஜாரா..!
உண்மையான ரசிகர்கள் செய்ய மாட்டார்கள்
போட்டிகளில் வெற்றி பெற நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அதேசமயம் அதனை விமர்சனம் செய்ய இரண்டு வரிகளை டைப் செய்தாலோ போதுமானது. ஆனால் உண்மையான ரசிகர்கள் ஒருபோதும் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால்,அவை பற்றி நீங்கள் மரியாதையுடன் கேள்வி எழுப்புங்கள். ஒருவேளை என்னை விட நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து வந்து முயற்சி செய்யுங்கள் எனவும் முகமது ஷமி பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.