IPL 2026: ஒரு போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள்.. கெத்து காட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
IPL Top 5 Highest Total Matches: சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச மற்றும் ஐபிஎல் முற்றிலும் பேட்ஸ்மேன்களைச் சார்ந்த ஒரு போட்டியாக மாறியுள்ளது என்பது தெளிவாகிறது. அதன்படி, ஐபிஎல் 2026 நெருங்கி வருவதால், ரசிகர்கள் மற்றொரு சாதனை படைக்கும் சீசனை எதிர்பார்க்கின்றனர்.
2026 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன் தொடங்குகிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த விறுவிறுப்பான போட்டிக்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த, லீக்கின் இரு இன்னிங்ஸிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகள் பற்றிய பட்டியலை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. டாப் 2வில் மும்பை, பெங்களூரு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச மொத்த ரன்கள் (இரு அணிகளும் சேர்ந்து எடுத்த ரன்கள்) எடுத்த சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே அமைந்தது. கடந்த 2024ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில், இவ்விரு அணிகளும் இணைந்து 549 ரன்கள் எடுத்தன. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது.




சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
2025ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணி மொத்தமாக 528 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
மூன்றாவது இடத்தில், 2024ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி உள்ளது. இந்தப் போட்டியிலும், மொத்தமாக 523 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
நான்காவது அதிகபட்ச ஸ்கோராக 2024ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 523 ரன்களை எட்டியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. அதேநேரத்தில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ALSO READ: ஐபிஎல் 2026 சீசன் எப்போது தொடக்கம்..? போட்டியின் நேரம் என்ன?
டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மொத்தம் 504 ரன்கள் எடுக்கப்பட்டு, 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், சமீபத்திய ஆண்டுகளில் ஐபிஎல் முற்றிலும் பேட்ஸ்மேன்களைச் சார்ந்த ஒரு போட்டியாக மாறியுள்ளது என்பது தெளிவாகிறது. அதன்படி, ஐபிஎல் 2026 நெருங்கி வருவதால், ரசிகர்கள் மற்றொரு சாதனை படைக்கும் சீசனை எதிர்பார்க்கின்றனர்.