Ind vs Eng 2nd Test: 2வது டெஸ்டுக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து.. அணியில் ஆர்ச்சருக்கு இடமா?
England Playing XI: இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தனது விளையாட்டுப் பட்டியலை அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட பென் டக்கெட் தொடர்ந்து இடம் பிடித்துள்ளார். ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் குடும்ப அவசரம் காரணமாக இடம் பெறவில்லை. இந்திய அணி பும்ராவின் பங்கேற்பு குறித்த சந்தேகம் நிலவுகிறது.

இங்கிலாந்து அணி
2025 ஐபிஎல் (IPL 2025) சீசனுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து (Ind vs Eng Test) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து தற்போது 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதை தொடர்ந்து, வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி அதாவது நாளை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விளையாடும் பிளேயிங் லெவனை (England Playing XI) அறிவித்துள்ளது. அதில், இங்கிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடமில்லையா..?
No change in England’s Playing XI, No Archer #INDvsENG #JofraArcher pic.twitter.com/yR2CetRJft
— Ankan Kar (@AnkanKar) June 30, 2025
முன்னதாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பர்மிங்காம் டெஸ்டில் விளையாடலாம் என்ற கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு விளையாடும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 2வது டெஸ்டுக்கு முன்பு, குடும்ப அவசரநிலை காரணமாக நேற்று அதாவது 2025 ஜூன் 30ம் தேதி பயிற்சி அமர்வில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், இன்று அதாவது 2025 ஜூலை 1ம் தேதி ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இணைவார் என்று கூறப்பட்டது. முதல் டெஸ்டில் விளையாடாத ஆர்ச்சர், இரண்டாவது போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். ஆர்ச்சர் கடந்த சில மாதங்களாக முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கலக்குவாரா பென் டக்கெட்..?
லீட்ஸில் நடந்த இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஹீரோவாக பென் டக்கெட் திகழ்ந்தார். இவர் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 62 ரன்கள் மற்றும் 149 ரன்கள் எடுத்தார். மறுபுறம், இந்திய அணி இந்த முறை அதன் விளையாடும் பதினொன்றில் பல பெரிய மாற்றங்களை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது டெஸ்டில் பங்கேற்காமல் போகலாம் என்ற தகவல்கள் உள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்களை முடிக்கும் தருவாயில் ஜோ ரூட் உள்ளார். அவர் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 2,927 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரூட் இன்னும் 73 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
இங்கிலாந்து அணியின் விளையாடும் பிளேயிங் லெவன்:
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.