IND W – PAK W: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. பக்கா பிளான் போட்டு வெற்றி கண்ட இந்திய அணி!
Women's Cricket World Cup 2025: இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2025 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் புயலால் பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

இந்திய மகளிர் அணி
2025 மகளிர் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை (IND W – PAK W) 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது தோல்வியற்ற சாதனையை இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) தக்க வைத்துக் கொண்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் 12 முறை ஒருநாள் போட்டிகளில் இதுவரை நேருக்குநேர் விளையாடியுள்ளன. இந்திய அணி இதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றது. கொழும்பில் நடந்த உலகக் கோப்பை போட்டியில், முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் எடுத்தது. 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய முழு பாகிஸ்தான் அணியும் வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பேட்டிங்கில் இந்திய அணி நிதான ஆட்டம்:
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மெதுவான ஆடுகளம் என்பதால் எந்த இந்திய பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்க முடியவில்லை. இந்தியா சார்பாக ஹர்லீன் தியோல் அதிகபட்சமாக 46 ரன்களும், பிரதிகா ராவல் 31 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும் எடுத்திருந்தனர். கடைசி நேரத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இந்திய அணி 247 ரன்கள் எடுக்க உதவினார்.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி:
பதிலுக்குப் பேட்டிங் செய்த பாகிஸ்தானின் அணி ஆரம்பம் முதலே தடுமாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் அவர்கள் இரு தொடக்க வீராங்கனைகளையும் இழந்தனர். இதற்கிடையில், தொடக்க ஆட்டக்காரர் முனீபா அலியின் ஆட்டமிழப்பு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. வீடியோ ரீப்ளேவை இரண்டு முறை மதிப்பாய்வு செய்த பிறகு, மூன்றாவது நடுவர் அவரை ரன் அவுட்டாக அறிவித்தார். இதன்பிறகு, சித்ரா அமீனும், நடாலியா பர்வேஸும் 69 ரன்கள் கூட்டணி அமைத்து பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டனர். பர்வேஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு உள்ளே வந்த கேப்டன் பாத்திமா சனா வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தனது கடைசி ஐந்து விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களுக்கு இழந்தது. சித்ரா அமீனின் 81 ரன்கள் எடுத்த போதிலும் பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியிலிருந்து காப்பாற்றத் தவறினார்.
12-0 என்ற தோல்வியற்ற சாதனை:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக 12வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இரு அணிகளும் முதன்முதலில் 2005ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் மோதின. அதன் பின்னர், அனைத்து ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது.