Diogo Jota Passes Away: பெரும் கார் விபத்து! போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ உயிரிழப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Diogo Jota Passes Away in Car Crash: லிவர்பூல் அணிக்காக விளையாடிய 28 வயதான போர்த்துகீசிய கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா, கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது சகோதரரும் இறந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோட்டா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு இழப்பை அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளது.

Diogo Jota Passes Away: பெரும் கார் விபத்து! போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ உயிரிழப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ

Published: 

03 Jul 2025 15:48 PM

விவர்பூல் (Liverpool) அணிக்காக விளையாடிய 28 வயதான போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா (Diogo Jota) , இன்று அதாவது 2025 ஜூலை 3ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார். இது அவரது ரசிகர்கள் மற்றும் போர்ச்சுகல் கால்பந்து ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டியோகோ ஜோட்டா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ரூட் கார்டோசோ (Rute Cardoso) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் இவரது மறைவை உறுதிப்படுத்தியுள்ளது. இதே கார் விபத்தில் அவரது சகோதரரும் உயிரிழந்தார். போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு இதை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, அறிக்கை மூலம் இரங்கலையும் வெளிப்படுத்தியுள்ளது.

போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு அறிக்கை வெளியீடு:

டியோகோ ஜோட்டா மறைவு குறித்து போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “2025 ஜூலை 3ம் தேதியான இன்று காலை ஸ்பெயினில் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவின் மரணத்தால் போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பும் முழு போர்த்துகீசிய கால்பந்து சமூகமும் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளன. தேசிய ஏ அணிக்காக கிட்டத்தட்ட 50 போட்டிகளில் விளையாடிய டியோகோ ஜோட்டா, ஒரு அசாதாரண மனிதர், அவர் தனது அனைத்து சக வீரர்களாலும், எதிர் அணியின் வீரர்களாலும் கூட மதிக்கப்பட்டார். அவர் ஒரு இனிமையான ஆளுமையைக் கொண்டிருந்தார்.” என தெரிவித்திருந்தது.

யார் இந்த டியோகோ ஜோட்டோ..?

கடந்த 1996ம் ஆண்டு டியோகோ ஜோட்டோ போர்ச்சுகலின் போர்டோவில் பிறந்தார். சிறுவயது முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டியோகோ ஜோட்டோ கடந்த 2014ம் ஆண்டு போர்ச்சுகல் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு தேசிய அணியில் நுழைந்தார். இதுவரை ஜோட்டோ 48 சர்வதேச போட்டிகளில் விளையாடி 14 கோல்களை அடித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு டியோகோ ஜோட்டா லிவர்பூல் அணியில் இணைந்தார். இந்த 5 வருட கிளப் வாழ்க்கையில் டியோகோ ஜோட்டா 123 போட்டிகளில் விளையாடி 47 கோல்களை அடித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம்:

பல வருடங்களாக காதலித்து வந்த டியோகோ ஜோட்டாவும் ரூட் கார்டோசோவும் ஜூன் 22, 2025 அன்று திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, இதை டியோகோ ஜோட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேற்று அதாவது 2025 ஜூன் 2ம் தேதி டியோகோ ஜோட்டாவின் மனைவியும் திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ளார். டியோகோ மற்றும் ரூட்டுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.