Asia Cup 2025: இலங்கை போட்டியில் காயம்.. ஃபைனலில் விளையாடுவாரா ஹர்திக் பாண்ட்யா?
இலங்கை அணியுடனான சூப்பர் 4 போட்டியில் அபார வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இதனிடையே இலங்கையுடனான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா ஆகியோர் காயமடைந்த நிலையில் அவர்கள் இருவரும் ஃபைனலில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா
ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணியுடனான சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றியை ருசித்தது. இதன்மூலம் ஆசிய கோப்பை 2025 தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனிடையே செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இது இந்த தொடரில் இரு அணிகளுக்குமிடையேயான 3வது மோதலாகும். ஏற்கனாவே ஆடிய 2 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றதால் நிச்சயம் ஆசிய கோப்பை 2025 சாம்பியன் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஹர்திக், அபிஷேக் சர்மா காயம்
இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் காயமடைந்தனர். இலங்கை அணி பேட்டிங் செய்ய வந்தபோது முதல் ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா, இடது தொடையில் தசை பிடிப்பால் அவதிப்பட்டு கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். தனது முதல் ஓவரின் குசல் முதல் பந்திலேயே மெண்டிஸை வீழ்த்தி விக்கெட் கைப்பற்றினார் ஹர்திக். ஆனால், அவர் மீண்டும் களத்திற்கு திரும்பாதது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
Also Read: மீண்டும் காதலில் ஹர்திக் பாண்ட்யா..? க்லு கொடுத்த பிரபல அசாம் நடிகை..!
மறுபுறம், அபிஷேக் சர்மா ஒன்பதாவது ஓவரில் பந்தை தடுக்க ஓடும்போது, அவருக்கு வலது தொடையில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனால் காலை பிடித்தபடியே நின்ற அவர் அசௌகரியமாக உணர்ந்ததை ரசிகர்கள் கண்டனர். இறுதியில் 10வது ஓவரில் அவர் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் பந்து வீச்சு இன்னிங்ஸ் முழுவதும் தங்களின் காயத்துக்கு சிகிச்சை எடுத்த வண்ணம் போட்டியை கண்டு களித்தனர்.
பாகிஸ்தான் ஆட்டத்தில் விளையாடுவார்களா?
இந்நிலையில் இலங்கை அணியுடனான ஆட்டம் முடிந்ததும் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோனே மோர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இருவரின் காயங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆட்டத்தின் போது இருவருக்கும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவின் நிலை குறித்து, இன்றிரவு (நேற்றிரவு) மற்றும் நாளை (இன்று) காலை ஆராய்வோம். பின்னர் அணியிருடன் கலந்து பேசி அதுகுறித்து முடிவெடுப்போம் . அதேசமயம் அபிஷேக் நலமாக இருக்கிறார் என விளக்கம் கொடுத்தார்.
Also Read: இது எங்களுக்கு அவமானம்! இந்திய அணிக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் சென்ற பாகிஸ்தான் அணி!
மேலும் 28ம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக, செப்டம்பர் 27 சனிக்கிழமை இந்தியா எந்தப் பயிற்சி அமர்வுகளையும் கொண்டிருக்காது என்றும் மோர்கெல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வீரருக்கும் நல்ல ஓய்வு அளிக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.