Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கோயில்களில் குவியும் பக்தர்கள்!

Ganesh Chaturthi: 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடைவீதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான கூட்டம் அலைமோதியது.

Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கோயில்களில் குவியும் பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

Published: 

27 Aug 2025 07:00 AM

தமிழ்நாடு, ஆகஸ்ட் 27: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. ஆனை முகத்தான், கணபதி என பல பெயர்களில் அழைக்கப்படும் விநாயகப்பெருமான் முழுமுதற் கடவுளாக அறியப்படுகிறார். தடைகளை நீக்குவதில் வல்லவர் என்பதால் பக்தர்கள் அவரை வணங்காமல் எந்தவொரு காரியத்தையும் செய்வதில்லை. இப்படியான விநாயகர் அனைத்து இடங்களிலும் முதலில் இடம்பெறுவது வழக்கம். இப்படியான நிலையில் விநாயகப் பெருமான் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் வரும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (ஆகஸ்ட் 27) கொண்டாடப்படுகிறது.

கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியூரில் இருக்கும் பலரும் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அதேசமயம் கடைவீதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்கான பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. விநாயகருக்கு உகந்த அருகம்புல் விலை தாறுமாறாக உயர்ந்தது. அதேசமயம் அவல் பொரி, தேங்காய், கொழுக்கட்டை மாவு, பூக்கள், தோரணம் என மக்கள் விலை அதிகமாக இருந்தாலும் வாங்கிச் சென்றனர். அதேசமயம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரையும் வாங்கிச் சென்று வீட்டில் பிரதிஷ்டை செய்தனர்.

Also Read: Ganesh Chaturthi: இந்த திசையில் விநாயகர் சிலை வைத்தால் செல்வம் கொட்டும்! – வாஸ்து டிப்ஸ்!

கோயிலில் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 26) மாலை பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அதேசமயம் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வீதிகளில் உள்ள விநாயகர் கோயில் தொடங்கி பெரிய பெரிய கோயில்களில் உள்ள விநாயகர் சிலைக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் விநாயகருக்கு அரிசி மாவு, அபிஷேக பொடி, தேன், விபூதி, இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ஆகிய அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மாலை அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: Ganesh Chaturthi: வீட்டில் விநாயகர் சிலை வைக்க போறீங்களா? – பின்பற்ற வேண்டிய விதிகள்!

மேலும் வீதிகள் தோறும் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்று பிரசாதம், அன்னதானம் ஆகியவை சிலை கரைக்கும் நாள் வரை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.