Tirupparankundram Murugan Temple: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கியது யாகசாலை பூஜைகள்… ஜூலை 14-ல் கும்பாபிஷேகம்

Tirupparankundram Murugan Temple: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14 அன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் மற்றும் புனித நீர் கலசங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாதுகாப்பு, மருத்துவம், அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் வழங்க தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

Tirupparankundram Murugan Temple: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கியது யாகசாலை பூஜைகள்... ஜூலை 14-ல் கும்பாபிஷேகம்

தமிழக அமைச்சர்கள் ஆய்வு

Published: 

11 Jul 2025 07:45 AM

மதுரை ஜூலை 11: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் (Thiruparankundram Murugan Temple) 2025 ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம் (Kumbabhishekam) நடைபெறுகிறது. இதையொட்டி 2025 ஜூலை 10 மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன. 75 யாக குண்டங்கள், 200 சிவாச்சாரியர்கள், 400 பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் சேகர்பாபு, மூர்த்தி (Ministers Shekar Babu, Murthy) ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு, மருத்துவம், அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. 16 மண்டபங்களில் 4 லட்சம் பக்தர்களுக்கான அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14-ஆம் தேதி கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூலை 10ஆம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. மங்கள இசைக்குப் பிறகு ப்ரசன்னாபிஷேகம் நடைபெற்றது. சூரியனிடமிருந்து அக்னி எடுக்கப்பட்டு கலாகர்சனம், யாகசாலை நிர்மாணம், புனித நீர் நிரப்பும் நிகழ்வுகள் நடைபெற்றன. தற்காலிக மூலவர் சன்னதியில் புனித நீர் வைக்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், முளைப்பாரி இடுதல், காப்பு கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்றன.

முதல் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

அத்தி மரத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமி, கோவர்த்தனாம்பிகை ஆகிய திருவுருவங்களிலிருந்து சக்தி நீர் கலசங்களில் புனிதம் செய்யப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. முதல் கால யாகசாலை பூஜையை தருமை ஆதினம் கயிலை மாசிலாமணி தேசிகர், கூனம்பட்டி ஆதினம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள் துவக்கி வைத்தனர்.

கும்பாபிஷேக தினமான ஜூலை 14 அதிகாலை 3:30 மணிக்கு யாக பூஜைகள் முடிந்து, 5:25 மணிக்கு மேல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். 200 சிவாச்சாரியார்கள், 70 ஓதுவார்கள், 30 நாதஸ்வர கலைஞர்கள், 20 குருவேத பாராயணப் பட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 96 வகை மூலிகைகள், 9 வகை சமித், தங்க மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜைக்காக பயன்படுத்தப்படுகிறது.

Also Read: இனி தமிழக கோயில்களில் பிரேக் தரிசனம்.. பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலையில் விரைவில் அமல்!

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

அதேபோல், கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் பூ.மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரவீன் குமார், கமிஷனர் லோகநாதன், அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், மருத்துவ குழுக்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடிநீர், ஆம்புலன்ஸ், சுகாதார வசதி, மருத்துவமனைகள், ட்ரோன் மூலம் புனித நீர் தெளித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சன்னதி தெருவில் 16 மண்டபங்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக காட்சிகளை நேரலை பார்க்க LED திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. 1,700 பேர் ராஜகோபுர மேல் தளத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார் ஈடுபடவுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேரில் ஆய்வு செய்யப்பட்டன. அமைச்சர்கள், அதிகாரிகள் கோயில் வளாகங்களை, யாகசாலை, ராஜகோபுர மேல் தளங்களை ஆய்வு செய்தனர். பின்னர், வள்ளி தேவஸ்தான திருமண மண்டபத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடந்தது.

114 கோவில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு

அனைத்தையும் சுற்றி பார்த்த பின், அமைச்சர் சேகர்பாபு கூறியது: “முகூர்த்த நாளில் கும்பாபிஷேகம் நடைபெறாத நாள் இல்லை என்பது திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு. 114 கோவில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடந்தது என்பது வரலாற்றில் பொன்னெழுத்தாகப் பதிக்கப்படும். திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்துக் கொண்டு அமைதியான முறையில் விழா நடந்தது. அதுபோலவே திருப்பரங்குன்றத்திலும் சிறப்பாக நடைபெறும். கும்பாபிஷேக தினத்தன்று உள்ளூர் விடுமுறை வழங்கும் கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.