Lalbaugcha Raja Vinayagar: மும்பையை கலக்கும் லால்பாக்சா ராஜா விநாயகர்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Vinayagar Chaturthi: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை மும்பையில் பிரமாண்டமாக லால்பாக் ராஜா விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராஜ தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை கவர்ந்துள்ளது. இஸ்லாமிய கைவினைஞர்கள் தயாரித்த திரைச்சீலை இந்த கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.

லால்பக்ஷா ராஜா
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் 2025, ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் தவிர்க்க முடியாத கடவுளாக திகழும் விநாயகரை வணங்காமல் மக்கள் எந்தவொரு செயலையும் செய்வதில்லை. அப்படிப்பட்ட விநாயகர் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இந்நாள் விநாயகர் சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. இந்த விசேஷ நாளில் ஊரெங்கும் இருக்கும் விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேசமயம் பல்வேறு இடங்களிலும் விதவிதமான வடிவங்களில், அளவுகளில் விநாயகருக்கு சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும். பின்னொரு நாளில் அது அருகிலிருக்கும் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது மும்பையில் மிக விமரிசையாக கொண்டாடப்படும். அங்குள்ள லால்பாக் பகுதியில் அமைக்கப்படும் ஒரு பெரிய விநாயகர் சிலையானது லால்பாக்சா ராஜா என அழைக்கப்படும். இதனை வழிபட இந்தியா முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் லால்பாக் பகுதிக்கு வருகை தருகிறார்கள்.
லால்பாக்சா ராஜ விநாயகர்
கிட்டதட்ட 10 நாட்கள் இங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும். அதன்படி 2025 ஆம் ஆண்டில், கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான விநாயகர் சிலை ராஜ தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தலையில் க்ரீடம், இடுப்பில் ஊதா நிற வேட்டி என காண்போரை மெய்சிலிர்க்க செய்யும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விநாயகர் சிலைகள் செய்வது எப்படி? கோவையில் மும்முர வேலை!
மேலும் விநாயகர் சிலை இருக்கும் மண்டபம் இந்த வருட அரண்மனை போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்க நிற சிம்மாசம், மின்னும் விளக்கு, விநாயகர் சிலை இருக்கும் மண்டப நிறம் என இது வசீகரிக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.
சமூக நல்லிணக்கத்துக்கு உதாரணம்
விநாயகர் சதுர்த்தி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சிலையானது விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்து வைக்கப்படுகிறது. அதற்கு முன் சிலை திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும். அந்த வெல்வெட் திரைச்சீலையை இஸ்லாமிய கைவினை கலைஞர்கள் தயாரித்துள்ளார்கள் என்பது சிறப்பு அம்சமாகும். அதேபோல் இந்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் நுழைவு வாயில் அரண்மனை அலங்காரத்தில் முடி சூட்டப்பட்ட ஒரு யானை தலையின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால் பக்தர்கள் இந்த மண்டபத்திற்குள் நுழையும்போதே ஒரு தெய்வீக உணர்வை அனுபவிக்கிறார்கள். மும்பையில் இந்த லால் பாக்ஷா ராஜா விநாயகரின் கொண்டாட்டமானது 91 ஆண்டுகளாக தொடர்கிறது.
Also Read: விநாயருக்கு விருந்து படைக்க ஆசையா..? ஈஸியான சேமியா பாயாசம் செய்து ஆசிர்வாதம் பெறுங்கள்..!
வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த விநாயகரை நாம் வணங்கினால் நமது விருப்பங்களை நிறைவேற்றுவதோடு வாழ்க்கையில் இன்பம், செல்வம், கல்வி, வளர்ச்சி ஆகியவை கிடைக்கும் என்பது சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரதிஷ்டை செய்யும் இந்த விநாயகர் சிலையை வழிபட காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை எவ்வித கட்டுப்பாடுகளின்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு 24 மணி நேரமும் ஆன்லைனில் தரிசன வசதியும் உண்டாக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான டிக்கெட் விலையும் கடந்த ஆண்டு போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரூ.50, ரூ. 200, ரூ.500 ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த விநாயகர் சிலைக்கு காலை 7 மணி முதல் 7.30 வரை, மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மாலையில் 7 மணி முதல் இரவு 7:30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 10:30 மணி வரை என நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.