மார்கழி அமாவாசை: உங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்க இன்று இதை செய்தால் போதும்!!
Margazhi Amavasya: குறிப்பாக அமாவாசை நாளில் குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் வழிபாடு செய்வது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையும் என்பதே ஆன்மீக நம்பிக்கை. அந்த நாளில் மனம் சுத்தமாக இருந்து அவர்களை நினைவு கூர்வது குடும்பத்திற்கு ஆனந்தம், அமைதி, வளர்ச்சி போன்றவற்றை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

மார்கழி அமாவாசை
பலரது வாழ்க்கையில் தாங்க முடியாத கஷ்டங்கள், பணநஷ்டங்கள், கடன் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் போன்றவை தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். எத்தனை தெய்வங்களைச் சுற்றியும் தீர்வு கிடைக்காமல் தவிப்போம். ஆனால், நம் வாழ்க்கைக்கே காரணமானது நம் முன்னோர்களும் குலதெய்வமும் தான். அவர்களை உண்மையான மனத்துடன் அடைந்தால், வாழ்க்கையில் ஏற்படும் பெரும்பாலான தடைகள் நீங்கும் என்பதே இன்றைய ஆன்மீக உண்மை.நம் உயிர் வாழ்வுக்கு காரணம் நம் பெற்றோர்; அவர்களுக்கு காரணம் அவர்களது பெற்றோர். இப்படியாக நம் வாழ்க்கையின் வேராக இருப்பவர்கள் நம் முன்னோர்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருபவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் உறுதியாக வரும் என நம்பப்படுகிறது. குறிப்பாக அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்குவது மிகுந்த பலனை வழங்கும் நாள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Also Read : காலை நேரத்தில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்… வாஸ்து சொல்வதென்ன?
சிறப்பு வாய்ந்த மார்கழி அமாவாசை:
இந்த மார்கழி அமாவாசை வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்துவரும் நேரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில் சரியான முறையில் குலதெய்வ வழிபாடு செய்தால், நீண்ட நாட்களாக தீராத கடன் பிரச்சனைகள், சொத்து சிக்கல்கள், வியாபார தடை, குடும்பத்தில் நிலவும் சங்கடங்கள் போன்றவை நீங்க வாய்ப்பு உண்டு என குறிப்பிடப்படுகிறது.
வீட்டில் சிறப்பு பூஜை:
அன்று காலையில் குளித்து சுத்தமான மனதுடன் வீட்டு பூஜை அறையில் பாசிப்பருப்பு பாயசம் செய்து குலதெய்வத்திற்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதன் பின்னர் மதியத்திற்கு முன்பாக சைவ உணவு சமைத்து, வாழை இலையில் பரிமாறி முன்னோர்களை நினைத்து காணிக்கை செலுத்த வேண்டும். அதன்பின்னர் காகங்களுக்கு உணவு வைப்பது பித்ரு தர்ப்பணத்தைச் செய்ததற்குச் சமமானது என்ற நம்பிக்கை உள்ளது. இது குடும்ப நலனுக்கும் வளத்துக்கும் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.
அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்:
அந்த நாளில் யாருடனும் தகராறு செய்யாமல், தேவையற்ற வேலைகள் இல்லாமல், அமைதியாக நாளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் கூறப்படுகிறது. மேலும், அந்த வழிபாட்டிற்குப் பிறகு ஏதாவது தங்கம் வாங்குவது, முடியாவிட்டால் குறைந்தபட்சம் மஞ்சள் என்னும் சுபச் சின்னத்தை வீட்டில் வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.
பரிகார வழிபாடு எதற்காக?
இது அச்சம், நம்பிக்கை அல்ல; நன்றியை உணர்ந்து முன்னோர்களை நினைவுகூரும் ஒரு ஆன்மிக செயலாகவே பார்க்கப்படுகிறது. அது மனத்துக்கு தைரியம் தருகிறது, நம்பிக்கையை அளிக்கிறது, வாழ்க்கையில் ஒரு உளவலிமையை உருவாக்குகிறது.
Also Read : பாதி வாளி நீர்.. குளியலறை முடி.. பாத்ரூமில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
குலதெய்வம், முன்னோர் வழிபாடு:
இந்த வழிபாட்டின் மூலம் குடும்பம் ஒன்றாக சேர்ந்து ஒரு நேர்மறை எண்ணத்தைப் பகிர்ந்துகொள்கிறது. இத்தகைய வழிபாடுகள் குடும்ப பந்தத்தை வலுப்படுத்தும். இவ்வாறு மனமார குலதெய்வத்தையும், முன்னோர்களையும் நம்பிக்கையுடன் வேண்டினால், வாழ்க்கையில் நன்மை நிகழும். வீரம், ஆரோக்கியம், பணவளம், அமைதி ஆகியவை குடும்பத்திற்குள் நிலைநிற்றும் என ஆன்மீக அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.