Tiruchendur: திருச்செந்தூர் முருகனின் தாய் வீடு எந்த கோயில் தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோயிலின் 2025 ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் பற்றிய பல்வேறு சிறப்பு செய்திகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் அங்குள்ள முருகன் கோயிலில் இருக்கும் மூலவர் சிலை எவ்வாறு திருச்செந்தூருக்கு கொண்டுவரப்பட்டது என்பது பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

திருச்செந்தூர் முருகன் கோயில்
இந்து மதத்தில் முருகப்பெருமான் தமிழ்க் கடவுள் என அனைவராலும் கொண்டாடப்படுகிறார். இப்படியான நிலையில் சிவனை விட சக்தி கொண்டவராக அறியப்படும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது. இவற்றில் மிக முக்கியமானது இரண்டாம் படை வீடாக அறியப்படும் திருச்செந்தூராகும். இங்கு செந்திலாண்டவர் என்ற திருப்பெயரோடு முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கடல் சார்ந்த நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ள திருச்செந்தூரில் தான் சூரபத்மன் என்னும் அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனால் முருகனின் விசேஷ நாட்களில் ஒன்றான கந்த சஷ்டி இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூருக்கு வந்தால் திருப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உண்டு என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர்.
மகா கும்பாபிஷேகம்
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலின் மகா கும்பிஷேகம் வரும் 2025, ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.15 மணியில் இருந்து 6.50 மணிக்குள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோயிலின் யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 1) மாலை தொடங்குகிறது. இப்படியான நிலையில் நாம் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய பல்வேறு சிறப்பு செய்திகளைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோயிலின் தாய் வீடு என அழைக்கப்படும் இடத்தைப் பற்றிக் காணலாம்.
இந்த கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கருவறையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய பால சண்முகராகவும், சுப்ரமணியனாகவும் முருகப்பெருமான் காட்சி கொடுக்கிறார். இந்த நிலையில் திருச்செந்தூரில் இருக்கும் மூலவர் சிலையானது திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குறுக்குத்துறை முருகன் கோயில் பாறையில் இருந்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
டச்சுக்காரர்கள் கடத்தப்பட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வட மலையப்ப பிள்ளை என்பவரது கனவில் முருகன் சொன்ன வழிகாட்டுதலின்படி நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்டு மீண்டும் திருச்செந்தூரில் வைக்கப்பட்டது. இருந்தாலும் உப்பு நீரில் இருந்ததால் சேதம் அடைந்த அந்த சிலையை புதுப்பிக்க வட மலையப்ப பிள்ளை முயற்சி செய்தார்.
அதற்காக பல்வேறு இடங்களில் பாறைகள் தேடிய போது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் பாறைகள் தெய்வீகத் தன்மை கொண்டது என்பதை அறிந்தார். இதனைத் தொடர்ந்து அந்தப் பாறையில் திருச்செந்தூர் முருகன் சிலையை செதுக்கியதாக கூறப்படுகிறது. அதனால்தான் இந்த கோயில் திருச்செந்தூர் முருகனின் தாய்வீடு என அழைக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் ஓடும் நிலையில் இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள மூலவர் சிலை நீருக்குள் மூழ்கி இருக்கும். வெள்ளம் வடிந்த பிறகு கோயிலை முழுமையாக சுத்தப்படுத்தி உற்சவர் சிலை, சப்பரங்கள், மற்றும் உண்டியல் ஆகியவற்றை மேல கோயிலில் இருந்து மீண்டும் குறுக்குத் துறை முருகன் கோயிலுக்கு எடுத்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)