27 செவ்வாய்கிழமை வழிபாடு.. கடன் பிரச்னையை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்!

Tiruchenduru Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கடன் பிரச்னையால் அவதிப்படுவோர் 27 செவ்வாய்கள் தொடர்ச்சியாக செவ்வரளி மாலை சாற்றி, ஓம் சரவணபவ மந்திரம் ஜபித்து வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்கிறது ஐதீகம். வெளியூரில் இருப்போர் வீட்டில் முருகன் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

27 செவ்வாய்கிழமை வழிபாடு.. கடன் பிரச்னையை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்!

திருச்செந்தூர் முருகன்

Published: 

03 Jul 2025 11:16 AM

பொதுவாக ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள், நாட்டம் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகு இறைவனிடத்தில் தான் போய் சரணடைவார்கள் என சொல்வார்கள். என்னதான் கடவுள் பற்றி பலவிதமான அபிப்ராயம் கொண்டிருந்தாலும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரச்னையும் தீர்ப்பான் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பல கோடி பேரின் இஷ்ட தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார். இந்த முருகனுக்கு ஊரில் உள்ள அனைத்து கோயில்களிலும் இடமுண்டும். பல்வேறு பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் தமிழ்நாட்டில் அறுபடை வீட்டில் விசேஷமாக காட்சிக் கொடுக்கிறார். இதில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் திகழ்கிறது.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்

சூரபதமன் என்னும் அரக்கனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் என புராணத்தில் சொல்லப்படுவதுண்டு. இந்த செந்திலாண்டவனை காண பல ஊர்களிலும் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பின் 2025 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை திருச்செந்தூர் முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் பல பிரச்னைகளையும் தீர்க்கும் முருகப்பெருமான் கடன் பிரச்னை தீரவும் வழிவகை செய்வார். அதற்கு நாம் வழிபாடு செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

கடன் பிரச்னை தீர என்ன வழி?

இந்த உலகில் கடன் இல்லாத மனிதர்கள் இல்லை. எப்பேர்பட்ட நபர்களாக இருந்தாலும் ஒரு அவசர சூழ்நிலை என்ற போது கடன் பெறும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் அதனை அடைத்து விடுகின்றனர். சிலர் கடன் பிரச்சனையால் வாழ்க்கை முழுவதும் அவதிப்படுகின்றனர். என்றைக்காவது ஒரு நாள் அந்த பிரச்சனை தீர்ந்து விடாத என அவர்கள் அனுதினமும் கடவுளை வேண்டிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் கடன் பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த வழிபாட்டில் செவ்வரளி பூ வாங்கி அதனை மாலையாக கட்டி முருகனுக்கு அளிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வெளியூரில் இருந்தால் வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் திருச்செந்தூருக்கு செல்வதில் சாத்தியம் கிடையாது. அதனால் திருச்செந்தூர் முருகனின் திரு உருவப் படம் வாங்கி அதனை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட்டால் பலன்களை பெறலாம் என சொல்லப்படுகிறது.

முருகனுக்கு செவ்வரளி பூ கொடுத்த பிறகு கோயில் அல்லது வீடு என எதுவாக இருந்தாலும் ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். தொடர்ந்து 108 முறை ஓம் சரவணபவ என்ற முருகனின் திருமந்திரத்தை சொல்லி மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். கோயிலாக இருந்தால் எந்த நேரம் வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீடாக இருந்தால் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பிரார்த்தனை செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை எந்தவித இடைவெளியும் இல்லாமல் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டும் வீட்டில் இந்த பூஜையை வேறு ஒருவரை வைத்து செய்ய சொல்லலாம். நிச்சயம் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் பலன்கள் கிடைக்கும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இது வீட்டு கடன் பிரச்சனை மட்டுமல்லாமல் தொழிலில் வளர்ச்சி, இழந்த செல்வங்களை மீட்க, வருமானம் அதிகரிக்க உள்ளிட்ட பிரச்சினைகளிலும் பலன் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

(ஆன்மிகம் மற்றும் சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)