Towel Hygiene: எத்தனை நாளுக்கு ஒருமுறை துண்டை துவைப்பது நல்லது..? இது ஏன் முக்கியம்?
Towel Cleaning: நம் தினசரி வாழ்வில் டவல் பயன்பாடு மிக முக்கியம். ஆனால், அழுக்கு டவலால் தோல் தொற்று, முகப்பரு, துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடல் துடைக்கும் டவலை 2-3 நாட்களுக்கு ஒருமுறை, முகம் துடைக்கும் டவலை தினமும், ஜிம் டவலை ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் துவைக்க வேண்டும். சரியான காற்றோட்டம் உள்ள இடத்தில் உலர வைப்பது அவசியம். 6 மாதங்களுக்கு ஒருமுறை புதிய டவல்களை மாற்றுவதும் நல்லது.

உடலை துவட்டும் துண்டு
நாம் தினமும் சோப்பு, ஷாம்பு என எத்தனை வாசனை பொருட்களை கொண்டு குளித்து புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால், நம் உடலை சுத்தம் செய்வதற்காக நாம் துடைக்கப் பயன்படுத்தும் டவல் (Towel), எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறது என்பதை நாம் எப்போதாவது நினைத்து இருக்கிறோமா..? அந்த டவல் எத்தனை முறை துவைக்காமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பல முறை நாம் வீட்டு சுத்தம் (Home Cleaning), சமையலறை சுத்தம், ஆடை சுத்தம் போன்றவற்றை நினைக்கிறோம். ஆனால் அதிக கவனம் செலுத்த வேண்டிய டவல் சுத்தத்தை புறக்கணிக்கிறோம். அதன்படி, ஒரு டவல் (Towel Hygiene) எவ்வளவு விரைவாக அழுக்காகிவிடும், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை துவைக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகளில் ஒன்றி காற்றோட்டம் குறைவாக உள்ள குளியலறையில் துவட்ட பயன்படுத்தும் துண்டைத் தொங்கவிடுகிறோம். அப்போதுதான், டவலானது அதிகமாக வேகமாக கிருமிகளால் பாதிக்கப்படும். எனவே, நீங்கள் அதை எவ்வளவு வேகமாக துவைத்து பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை நாம் துண்டுகளை துவைக்க வேண்டும்..?
- உடலை துவட்டும் துண்டை குறைந்தது 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை துவைத்து பயன்படுத்துவது நல்லது.
- உங்கள் முகத்தை துடைக்கும் துண்டை ஒவ்வொரு நாளும் அல்லது குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 2 முறையும் அலசி வெயிலில் காயவைப்பது நல்லது.
- நீங்கள் ஜிம்மிற்கு பயன்படுத்தும் துண்டு அல்லது வியர்வையை துடைக்க பயன்படுத்தும் துண்டுகளை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு உடனடியாக துவைப்பது நல்லது.
- கைகளைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துண்டை 2 நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்.
சரியான நேரத்தில் துண்டை துவைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
தோல் தொற்று:
அழுக்கு துண்டுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் தோல் வெடிப்புகள் அல்லது பூஞ்சை தொற்றுகளை ஏற்படுத்தும்.
முகப்பரு:
குறிப்பாக முகத்திற்குப் பயன்படுத்தப்படும் துண்டு அழுக்காக இருந்தால், அது முகத்தில் பருக்களை ஏற்படுத்தும்.
துர்நாற்றம்:
அழுக்கு மற்றும் ஈரமான துண்டுகள் துணிகளிலும் உடலிலும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
சுகாதார பாதிப்பு:
அழுக்கு நிறைந்த துண்டுகளை மீண்டும் மீண்டும் துவைக்காமல் சுத்தம் செய்யும்போது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்க செய்யலாம்.
துண்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது எப்படி?
- 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை துண்டை சுத்தமாக துவைக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
- துண்டை சரியாக உலர வைத்து பயன்படுத்துங்கள். சரியாக உலராத துண்டுகள் நாற்றத்தை வெளியேற்றும். முடிந்தவரை வெயிலில் உலர வைக்க முயற்சி செய்யுங்கள்.
- துண்டுகளை துவைக்கும்போது வாஷிங் மெஷினில் சூடான நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு பயன்படுத்தவும்.
- ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை பழைய துண்டுகளை மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.