குழந்தை வளர்ப்பு எனும் பெயரில் இதையெல்லாம் செய்கிறீர்களா?
Modern Parenting: குழந்தைகளின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் சமூக வலைதள கணக்குகளைத் தவிர்ப்பதும், அவர்களின் தற்சார்பு திறனை முடக்கும் 'ஹெலிகாப்டர் பேரண்டிங்' முறையைக் கைவிடுவதும் தற்போதைய அவசியமாகும். குழந்தைகளைத் தங்களின் கனவுகளைத் திணிக்கும் ஒரு கருவியாகப் பார்க்காமல், அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் முறையான மருத்துவப் பாதுகாப்பையும் வழங்குவது பெற்றோரின் கடமையாகும்.

மாதிரி புகைப்படம்
இன்றைய நவீன உலகில், குழந்தைகளின் வளர்ப்பு என்பது ஒரு கலை என்பதையும் தாண்டி, பல நேரங்களில் சமூக வலைதள விளம்பரப் பொருளாக மாறிவருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்குள் சில குறிப்பிட்ட வளர்ப்பு முறைகள் முற்றிலுமாக மறைய வேண்டும் என்று இணையவாசிகள் தங்களின் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர். ஒரு பிரபல சமூக வலைதளக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மக்கள் விரும்பாத அந்த 5 போக்குகளை இங்கே விரிவாகக் காண்போம்.
குழந்தைகளின் சமூக வலைதள கணக்குகள்
பல பெற்றோர்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கென்று தனித்தனியாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி, அவர்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பதிவிடுகின்றனர். இது “Sharenting” என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளின் தனியுரிமைக்கு (Privacy) மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைவதோடு, எதிர்காலத்தில் அவர்கள் சைபர் புல்லிங் எனப்படும் இணையவழித் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தங்களின் சம்மதத்தைத் தெரிவிக்கும் முதிர்ச்சி பெறுவதற்கு முன்பே, அவர்களைப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என்று மக்கள் கருதுகின்றனர்.
ஹெலிகாப்டர் பேரண்டிங் (அதிகப்படியான கண்காணிப்பு)
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் ஒரு ஹெலிகாப்டர் போல மேலிருந்து கண்காணிக்கும் “ஹெலிகாப்டர் பேரண்டிங்” முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பெற்றோரை எதிர்பார்க்கும் நிலையில் வளரும் குழந்தைகளுக்கு, ஒரு சிறிய சிக்கலைக்கூடத் தாமாகத் தீர்க்கும் திறன் (Problem Solving Skills) இருப்பதில்லை. ஒரு வாழைப்பழத்தைக் கூடத் தோல் உரிக்கத் தெரியாத அளவிற்குப் பல குழந்தைகள் தற்சார்பு இன்றி வளர்க்கப்படுவது, அவர்களின் எதிர்கால தன்னம்பிக்கையைப் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளை ஒரு ‘புராஜெக்ட்’ போலக் கருதுதல்
சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், தங்களின் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு ‘புராஜெக்ட்’ (Project) போலக் கருதுகின்றனர். அவர்களை எப்போதும் எதிலாவது முதலிடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இயந்திரத்தனமாக வளர்ப்பது கண்டிக்கத்தக்கது. “தோட்டக்காரன் செடியை வளர்ப்பது போல வளர்க்க வேண்டுமே தவிர, ஒரு தச்சன் மரச்சாமானைச் செதுக்குவது போலக் குழந்தையைச் செதுக்கக் கூடாது” என்ற கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது. குழந்தைகள் அழுவதற்கும், அழுக்காவதற்கும், சலிப்படையவும் அவர்களுக்கு உரிமை உண்டு என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.
மருத்துவ ஆலோசனைகளைப் புறக்கணித்தல்
பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘விட்டமின் K’ (Vitamin K) ஊசியைத் தற்போதைய சில பெற்றோர்கள் இயற்கை என்ற பெயரில் மறுத்து வருகின்றனர். ரத்த உறைதலுக்கு அவசியமான இந்தச் சத்து பற்றாக்குறையினால், குழந்தைகளுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு கூட நிகழ வாய்ப்புள்ளது. மருத்துவ அறிவியல் ஆதாரங்களைத் தவிர்த்துவிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலித் தகவல்களை நம்பி இத்தகைய முடிவுகளை எடுப்பது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.