Narendra Modi: 4 முறை ட்ரம்ப் தொலைபேசி அழைப்பு.. நிராகரித்த பிரதமர் மோடி!

அமெரிக்கா விதித்த இறக்குமதி வரியால் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், பிரதமர் மோடி அழைப்பை ஏற்க மறுத்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவை "இறந்த பொருளாதாரம்" என ட்ரம்ப் குறிப்பிட்டது மோடியின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Narendra Modi: 4 முறை ட்ரம்ப் தொலைபேசி அழைப்பு.. நிராகரித்த பிரதமர் மோடி!

டொனால்ட் ட்ரம்ப் - பிரதமர் மோடி

Published: 

27 Aug 2025 08:36 AM

இந்தியா, ஆகஸ்ட் 27: இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழைப்புகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை என ஜெர்மனியைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2025 ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அன்றைய நாள் முதல் அவர் அமெரிக்காவின் வளர்ச்சிக்காக பல்வேறு வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது உலக நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான தொடர்பில் விரிசல் ஏற்படும் அளவுக்கு சென்றுள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அண்மையில் அறிவித்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு 50 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டது.

இதனிடையே இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிவிதிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா மீதான கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேச முயற்சித்துள்ளார். 4 முறை அவர் முயற்சித்த நிலையில் தொலைபேசி அழைப்பை பிரதமர் மோடி ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனியை சேர்ந்த பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!

நாளிதழில் வெளியான செய்தி

அந்த செய்தியில் இந்தியாவும் ரஷ்யாவும் இறந்த பொருளாதாரங்கள் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அவரது பேச்சு மோடிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் விளைவாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்பாகவே டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டதாக கூறினார். ஆனால் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மிக கவனமுடன் செயல்பட்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்க உறவு ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2025, ஆகஸ்ட் 10 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி டிரம்ப் கூறிய பொருளாதாரம் என்ற கருத்தை மறைமுகமாக மறுத்தார். அதேசமயம் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா முன்னேறி வருவதாகவும் கூறினார். மேலும் சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது தான் மட்டுமே போர்நிறுத்தத்துக்கு காரணம் என டிரம்ப் கூறி வருகிறார். இதனால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. டிரம்புடன் முக்கிய மீட்டிங்? என்ன மேட்டர்?

இதற்கிடையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில் இந்தியா – சீனா இடையேயான உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா நிற்க விரும்பவில்லை எனவும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.