“காலாவதி மருந்து கொடுத்ததாக அவதூறு வீடியோ”.. மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!
Karnataka doctor shoots self: இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலர் டாக்டர் ராஜு பிகிலேயை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

மாதிரி புகைப்படம்
கர்நாடகா, ஜனவரி 24: கர்நாடகாவில், காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் அவதூறு வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஜவுளிக்கடை ஊழியரான தீபக் மீது இளம்பெண் ஒருவர் தவறாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவதூறு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால், தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தச் சம்பவம் மறைவதற்குள், சமூக வலைத்தளங்களில் வைரலான அவதூறு வீடியோவால் மனமுடைந்து அவமானமடைந்த ஒரு மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட மற்றொரு சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!
காலாவதி மாத்திரை கொடுத்தாக வீடியோ:
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா (கார்வார்) மாவட்டத்தைச் சேர்ந்த அவார்ஷா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு பிகிலே (56). இவர் அந்தப் பகுதியில் உள்ள பிகிலே நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு டாக்டர் ராஜு பிகிலே குறித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ராஜு பிகிலே தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு காலாவதியான மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவதும், காலாவதியான மாத்திரைகளைக் கொடுப்பதும் பதிவாகியிருந்தது.
மனமுடைந்த மருத்துவர்:
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலர் டாக்டர் ராஜு பிகிலேயை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர். இந்த வீடியோவைப் பார்த்த டாக்டர் ராஜு பிகிலே, தான் எந்த நோயாளிக்கும் காலாவதியான மருந்துகளைக் கொடுக்கவில்லை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ அவதூறு தகவல்களைப் பரப்பிவிட்டதாகவும் தனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறி மனமுடைந்ததாகத் தெரிகிறது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:
இந்த நிலையில், அவமானமடைந்த டாக்டர் ராஜு பிகிலே, நேற்று காலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் இரட்டைக்குழல் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அங்கோலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தவறான தகவல்களின் தாக்கத்தையும், இணையவழி அவதூறுகள் குறித்து விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது வளர்ந்து வரும் சமூக ஊடகங்கள் சமூதாயத்தில் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்த ஒரு எச்சரிக்கையாகவும் அமைகிறது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)