மாரடைப்பால் அடுத்தடுத்த மரணம்.. கோவிட் தடுப்பூசி காரணமா? சித்தராமையா முக்கிய உத்தரவு!

Karnataka CM Siddaramaiah On Covid Vaccine: கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்துள்ளார்.

மாரடைப்பால் அடுத்தடுத்த மரணம்.. கோவிட் தடுப்பூசி காரணமா? சித்தராமையா முக்கிய உத்தரவு!

சித்தராமையா

Updated On: 

02 Jul 2025 12:44 PM

கர்நாடக, ஜூலை 02 : கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசியால் (Covid Injection) மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், மாரடைப்பு ஏற்படுவதற்காக காரணத்தை கண்டறிய விசாரணைக்கு சித்தராமையா (Karnataka CM Siddaramaiah)  உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலமாக மாரடைப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.

மாரடைப்பால் அடுத்தடுத்த மரணம்

மதுபானம், புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம் போன்ற காரணங்களால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். சமீப காலங்களில் கர்நாடகாவில் மாரடைப்பால் பலரம் உயிரிழந்து வருகின்றனர்.

குறிப்பாக, ஹாசன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும்  கடந்த 40 நாட்களில் மட்டும் மாரடைப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 2025 ஜூன் 30ஆம் தேதி மட்டும் நான்கு பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் 19 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள், 8 பேர் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், மீதமுள்ளவர்கள் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஹாசனில் 190 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இப்படியான சூழலில், கர்நாடக முதல்வர் சித்தராமையா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சித்தராமையா முக்கிய உத்தரவு


இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சித்தராமையா கூறுகையில், “கொரோனா காலத்தில் தடுப்பூசியை மக்கள் செலுத்தியதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்திருக்கலாம். இதுகுறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இறப்புகளுக்கான காரணத்தை விசாரிக்க டாக்டர் ரவீந்திரநாத் தலைமையிலான நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது முடிவுகளை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநிலத்தில் இளைஞர்களிடையே திடீர் மரணங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் ஏதேனும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்து முழுமையான ஆய்வு நடத்த பிப்ரவரியில் இதே குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”என தெரிவித்தார்.