Operation Sindoor: பயங்கரவாதிகளை ஆதரித்த பாகிஸ்தான்..! இந்தியா மீது தாக்க முயற்சித்ததால் பதிலடி.. இந்திய இராணுவம் விளக்கம்!
India Pakistan Tensions: இந்திய ராணுவம், கடந்த மே 10 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்துர் குறித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது. பயங்கரவாதிகளின் மறைவிடங்களை மட்டுமே தாக்கியதாகவும், பாகிஸ்தானின் பதிலடி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையாக செயல்பட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல்கள் தோல்வியடைந்ததாகவும் கூறப்பட்டது.

டெல்லி, மே 12: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து இந்திய இராணுவம் (Indian Army) தொடர்ந்து 2வது நாளாக 2025 மே 12ம் தேதியான இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். இராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் காய், கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் விமானப்படையின் ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி ஆகியோர் மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து 32 நிமிடங்களுக்கு மேலாக பேசினர். 2025 மே 10ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (India Pakistan Tensions) இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று அதாவது மே 11ம் தேதி மாலை 6:30 மணிக்கு, இதே அதிகாரிகள் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்கள் சந்திப்பு: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி
செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, “ பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே எங்கள் போராட்டம் இருந்தது. கடந்த 2025 மே 7ம் தேதி அன்று, பயங்கரவாதிகளின் மறைவிடங்களை மட்டுமே நாங்கள் தாக்கினோம். இதன்பிறகு, பயங்கரவாதிகளை ஆதரிப்பது பொருத்தமானது என்று பாகிஸ்தான் இராணுவம் நினைத்தது. எனவே, இந்த தாக்குதல்களை தங்கள் சொந்த தாக்குதல்களாக பாகிஸ்தான் இராணுவம் நினைத்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த சூழ்நிலையில், இந்திய இராணுவம் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமானது. இதில், பாகிஸ்தான் இராணுவம் என்ன இழப்புகளை சந்தித்தாலும், அவர்களே அதற்கு பொறுப்பு. எங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய நாட்டிற்கு ஒரு சுவர் போல நின்றது. எதிரி அதை ஊடுருவிச் செல்வது சாத்தியமில்லை” என்று தெரிவித்தார்.
டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்:
இதன்பிறகு பேசிய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், “ முன்னதாக நேற்று அதாவது 2025 மே 12ம் தேதி பாகிஸ்தான் விமானநிலையங்களின் அவலநிலையையும், இன்று ஏர் மார்ஷலின் விளக்கக்காட்சியையும் நீங்கள் பார்த்தீர்கள். எங்கள் விமானநிலையங்கள் எல்லா வகையிலும் செயல்படுகின்றன. எங்கள் கட்டம் காரணமாக பாகிஸ்தானின் ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் தீய நடவடிக்கைகள் அழிக்கப்பட்டதால், இங்குள்ள எங்கள் எல்லைப் பாதுகாப்புப் படையை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ”நமது தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடந்தது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது வருந்தத்தக்க விஷயம். கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. அப்போது நமது இராணுவத்தினரை மட்டுமல்லாமல், அப்பாவி மக்களை தாக்குகிறார்கள். கடந்த 2024ம் ஆண்டில் சிவகோடி கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்களும், இந்த ஆண்டு அதாவது 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமிலும் அப்பாவி சுற்றுலா பயணிகள் என பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் மீதான எங்கள் துல்லியமான தாக்குதல்கள் LOC மற்றும் IB ஐ கடந்து நடத்த திட்டமிட்டோம். எனவே நாங்கள் வான் பாதுகாப்புக்குத் தயாராக இருந்தோம். 2025 மே 9-10 அன்று பாகிஸ்தான் விமானப்படை எங்கள் விமானநிலையங்கள் மற்றும் தளவாட நிறுவல்களைத் தாக்கியபோது, நமது வலுவான வான் பாதுகாப்பு கட்டத்தின் முன் பாகிஸ்தான் இராணுவம் தோல்வியடைந்தது”என்றார்.