Indian Defense Deals: ரூ. 1.05 லட்சம் கோடி மதிப்புள்ள 10 இராணுவ கொள்முதல் திட்டம்.. மத்திய அரசு ஒப்புதல்..!
Indigenous Defense Equipment: ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டத்தில், ரூ. 1.05 லட்சம் கோடி மதிப்பிலான 10 முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 'மேக் இன் இந்தியா' கொள்கைக்குட்பட்டவை. கவச மீட்பு வாகனங்கள், மின்னணு போர் அமைப்பு, ஒருங்கிணைந்த பொதுவான சரக்கு மேலாண்மை அமைப்பு மற்றும் தரையிலிருந்து வான் ஏவுகணைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தலைமையில் இன்று அதாவது 2025 ஜூலை 3ம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டத்தில் (DAC meeting) சுமார் ரூ. 1.05 லட்சம் கோடி மதிப்புள்ள 10 முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் ‘இந்திய-IDDM’ அதாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட வகையின் கீழ் வருகின்றன. கடற்படையின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக பல முக்கியமான கொள்முதல்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கப்பல்களைப் பாதுகாக்க கடலில் வைக்கப்பட்டுள்ள வெடிக்கும் சாதனங்களான மூர்டு மைன்கள் மற்றும் எதிரிகளின் கண்ணிவெடிகளை கண்டறியும் கப்பல்களான மைன் கவுண்டர் மெஷர் வெசல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்:
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கவச மீட்பு வாகனங்கள், மின்னணு போர் அமைப்பு, முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த பொதுவான சரக்கு மேலாண்மை அமைப்பு மற்றும் தரையிலிருந்து வான் ஏவுகணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு DAC தனது தேவையை ஏற்றுக்கொள்வதை (AoN) வழங்கியது. இந்த கொள்முதல்கள் அதிக இயக்கம், பயனுள்ள வான் பாதுகாப்பு, சிறந்த விநியோக சங்கில் மேலாண்மை மற்றும் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும்?
DAC approves 10 capital acquisition proposals
Defence Acquisition Council, #DAC, under the chairmanship of Defence Minister @rajnathsingh, has accorded Acceptance of Necessity for ten capital acquisition proposals amounting to over one lakh crore through indigenous sourcing.… pic.twitter.com/yof9JJ6zhq
— All India Radio News (@airnewsalerts) July 3, 2025
பாதுகாப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் அமைப்புகள். இவை அனைத்தும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவச மீட்பு வாகனம்:
போரின் போது சேதமடைந்த டாங்கிகள் மற்றும் கனரக வாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு கவச மீட்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
மின்னணு போர் அமைப்பு:
எதிரி ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முடக்குவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பமான மின்னணு போர் அமைப்பு வாங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொதுவான சரக்கு மேலாண்மை அமைப்பு:
இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இடையே விநியோகச் சங்கிலியை சிறப்பாகவும் ஒருங்கிணைக்கும் அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள்:
விமானப்படை மற்றும் கடற்படையின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் வாங்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் விளக்கம்:
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆண்டு உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் ஏற்றுமதி ரூ.24,000 கோடியாக உயர்ந்துள்ளது. 10 முதல் 11 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.43,000 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு உற்பத்தி, இப்போது ரூ.1,46,000 கோடியை தாண்டியுள்ளது. தனியார் துறையின் பங்களிப்பு ரூ.32,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.600-700 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு ஏற்றுமதிகள் இன்று ரூ.24,000 கோடி என்ற சாதனை அளவைத் தாண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
உள்நாட்டு தொழிலை ஊக்குவித்தல்:
இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய பாதுகாப்பு துறையால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும். இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் வெளிநாட்டு இறக்குமதிகளை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும்.