“எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டுமென ஆலோசனை வழங்க தயார்”.. பிரதமர் மோடி பரபர பேச்சு!!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுவதாக பெருமிதம் தெரிவித்தார். அதோடு, இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மோடி
டெல்லி, டிசம்பர் 01: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு, பீகார் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து மீண்டு வந்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தங்களது கடமையை செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு பேசிய அவர், பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். அதோடு, இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குவதாகவும், தொடர் வெற்றியால் தங்களுக்கு அகங்காரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read : புதிய தொழிலாளர் குறியீடுகள் சொல்வது என்ன? இதில் ஒருவரின் அடிப்படை சம்பளம் பாதிக்குமா?
எதிர்கட்சிகளுக்கு ஆலோசனை வழங்க தயார்:
மேலும், எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தான் ஆலோசனை வழங்கத் தயாராக இருப்பதாக கூறிய அவர், குளிர்காலக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளின் செயல்பாட்டையும் அவர்கள் சீர்குலைக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில கட்சிகளால் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை, என்று காங்கிரஸை வெளிப்படையாக சாடிய அவர், தோல்வியின் ஏமாற்றத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட குழப்பத்தினால், நாடாளுமன்றம் போர்க்களமாகவோ அல்லது பெருமையை வெளிப்படுத்தும் இடமாகவோ மாறிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளும் அதன் கடமையைச் செய்ய வேண்டும். அவர்கள் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாடகம் நடத்தக்கூடாது:
கட்சி வேறுபாடுகளைக் கடந்து இளம் எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், “நாடகம் நடத்துவதற்கு வேறு நிறைய இடங்கள் உள்ளன. அதைச் செய்ய விரும்புபவர்கள் அங்குச் சென்று அதனைச் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் எந்த நாடகமும் நடக்கக்கூடாது” என்று கடுமையாக சாடியுள்ளார்.
Also Read : ஐயப்ப பக்தர்களே… விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு
மக்களிடம் செல்ல முடியாததால் கோபம்:
எதிர்மறையான கருத்துக்களை வரம்புகளுக்குள் வைத்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சில மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களது ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், அவர்களால் மக்களிடம் செல்ல முடிவியவில்லை என்றும் சாடினார். அதனால், தான் அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது கோபம் வருவதாகவும், சில கட்சிகள் நாடாளுமன்றத்தை கோபத்தை வெளிப்படுத்தும் இடமாக பயன்படுத்தும் புதிய மரபைத் தொடங்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.