ஜன்னலுக்குள் சிக்கிய தலை.. இரவு முழுவதும் பள்ளியில் தவித்த சிறுமி!

ஒடிசாவில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, பள்ளி மூடிய பின் ஜன்னலில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு முழுவதும் ஜன்னலில் சிக்கிக்கொண்ட சிறுமி, காலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜன்னலுக்குள் சிக்கிய தலை.. இரவு முழுவதும் பள்ளியில் தவித்த சிறுமி!

ஜன்னலில் மாட்டிக்கொண்ட சிறுமி

Updated On: 

23 Aug 2025 08:24 AM

ஒடிசா, ஆகஸ்ட் 23: ஒடிசாவில் பூட்டப்பட்ட பள்ளியில் ஒருநாள் இரவு முழுவதும் சிறுமி ஒருவர் ஜன்னலிடையே சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வழக்கம்போல நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) காலையில் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். மாலையில் பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களும் வெளியேறிய நிலையில் அச்சிறுமி மட்டும் பள்ளிக்குள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவள் இருப்பதை அறியாமல், பள்ளி வாயிற்காப்பாளர் வெளிகேட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனிடையே பள்ளி சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பதறி போயினர். பல்வேறு இடங்களில் தேட தொடங்கினர்.

பள்ளியில் இருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் எல்லோரும் போய் விட்டார்கள் என காவலாளி சொல்லியதால் பிற இடங்களில் சிறுமியின் குடும்பத்தினர் தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையில் காவல்துறையிலும் புகாரளிக்கப்பட்டது. சிறுமியின் குடும்பத்தினருடன் சேர்ந்து அவள் வசிக்கும் கிராமத்தின் மக்களும் இரவு முழுவதும் தேடியும் சிறுமியை கண்டறிய முடியவில்லை. நேரம் செல்ல செல்ல பதற்றம் அதிகரிக்க தொடங்கியது.

இதையும் படிங்க:  ஆதாரில் மோசடி.. இறந்த கருவுடன் வாழும் 16 வயது சிறுமி – நடந்தது என்ன?

ஜன்னலுக்குள் சிக்கிய தலை

இதற்கிடையில் பள்ளிக்குள் சிக்கிய சிறுமி அங்கிருந்து வெளியேற பல்வேறு வழிகளை கையாண்டுள்ளார். இறுதியாக தன்னிடம் உள்ள பலத்தைக் கொண்டு ஜன்னல்களில் இருந்த இரும்புக் கம்பிகளை உடைத்து தப்பிக்க முயன்றாள். ஆனால் ஜன்னல் வழியே உடல் நுழைந்த சிலையில் எதிர்பாராத விதமாக தலைப்பகுதி சிக்கிக்கொண்டது. இதனை அறியாமல் வேகமாக இழுக்க முயல அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அசதியில் தூங்கி விட்டாள்.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22) காலையில் பள்ளி ஜன்னலில் சிறுமி சிக்கியிருப்பதை அந்த வழியாக சென்ற கிராமவாசிகள், உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமி குடும்பத்தினர், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அவளை மீட்டனர், அதன் பிறகு சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவளது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுமி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க23 வயது இளைஞரை கொலை செய்த 16 வயது வடமாநில சிறுமி.. பகீர் சம்பவம்!

பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம்

இதற்கிடையில் சிறுமி ஜன்னலில் சிக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைக் கண்டு நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் பள்ளி ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

அதேசமயம் பள்ளி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “வழக்கமாக எங்கள் பள்ளி சமையல்காரர் தான் வகுப்பறைக் கதவுகளைப் பூட்டிச் செல்வார்.  ஆனால் பலத்த மழை காரணமாக, அன்றைய நாளில் அவர் பணியில் இல்லை. மாலை 4.10 மணிக்கு வகுப்பறை கதவை மூட இரண்டு ஏழாம் வகுப்பு மாணவர்களை அனுப்பினோம். ஆனால் இரண்டாம் வகுப்பு பயிலும் அச்சிறுமி மாணவி   மேசையின் கீழ் தூங்கியதை தவறுதலாக மாணவர்கள் அவளைக் கவனிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.