ரூ.512 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி.. மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி?
512 Crore Rupees GST Scam in Madhya Pradesh | மத்திய பிரதேசத்தில் போலி இன்வாய்ஸ் மூலம் ரூ.512 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இரண்டு பேரை கைது செய்துள்ள அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
மத்திய பிரதேசம், ஜூலை 01 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) போலி இன்வாய்ஸ் (Invoice) மூலம் ரூ.512 கோடி ஜிஎஸ்டி (GST – Goods and Service Tax) மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியை பொருளாதார குற்றப்பிரிவு (Economic Offences Wing) துறை கண்டுபிடித்த நிலையில், இது தொடர்பாக இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது மோசடி விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், போலி இன்வாய்ஸ் மூலம் ரூ.512 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிகப்பெரிய ஜிஎஸ்டி மோசடி – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மத்திய பிரதேசத்தில் போலி இன்வாய்ஸ் மூலம் ஜிஎஸ்டி மோசடி நடைபெற்ற விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான வினோத் சஹாய் மற்றும் நீலு சோன்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சஹாய் ஜபல்பூரில் உள்ள டிபிர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது, சஹாய் 23-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி ஜிஎஸ்டி பில்கள் மூலம் வரி சலுகைகளை தவறாக பெற்று மோசடி செய்து வந்துள்ளார்.
மோசடி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள 150 வங்கி கணக்குகள்
உண்மையில் சஹாய் சமர்பித்த பில்கள் அனைத்தும் போலியானவை என்றும், அவர் கணக்கு காட்டிய நிறுவனங்கள் அனைத்துமே பொய்யானது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி பில்களில் சஹாய் கணக்கு காட்டிய நிறுவனங்கள் அனைத்தும் பொய்யானது என்றும் அவை வெறும் காகித அளவிலேயே இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இந்த மோசடி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு துறை கண்டறிந்துள்ளது.
பெரிய நகரங்களில் இருந்து நடத்தப்பட்ட மோசடி
இந்த விவகாரத்தில் சஹாய் இடம் இருந்த போலி ஆவணங்கள், ஜிஎஸ்டி பில் புத்தகங்கள், ஆதார் மற்றும் பான் ஆகிய முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த மோசடி ஜபல்பூர், நாக்பூர், பிலாஸ்பூர், கோர்பா, ராஞ்சி ஆகிய முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு பினனால் மிகப்பெரிய மோசடி மற்றும் மோசடி கும்பல் மறைந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.