இந்த காய்கறி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் – சமீபத்திய ஆய்வில் தகவல்

Diabetes Breakthrough : உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் என்ற வேதிப் பொருள் இரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைப்பதாக தெரியவந்துள்ளது. இது நம்பிக்கைக்குரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த காய்கறி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் - சமீபத்திய ஆய்வில் தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

06 Jul 2025 23:28 PM

ஸ்வீடனில் (Sweden) உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், ப்ரோக்கோலியில் காணப்படும் இயற்கையான பொருளான சல்ஃபோராபேன், நீரிழிவு நோய்க்கு (Diabetic) முந்தைய நிலையில் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை (Blood Sugar) அளவைக் கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளது.  இந்த ஆய்வு 35 முதல் 75 வயதுடைய 89க்கும் அதிக எடை உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது. அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவிற்கு அவர்களின் உணவில் சல்போராபேன் வழங்கப்பட்டது, மற்றொரு குழுவிற்கு மருந்து வழங்கப்பட்டது. 12 வாரங்களுக்குப் பிறகு, 74 பேரிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், சல்ஃபோராபேன் எடுத்துக் கொண்டவர்களின் குளுக்கோஸ் அளவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டது. குறிப்பாக இளம் வயதினர் மற்றும் ஃபேட்டி லிவர்  பிரச்னை இல்லாதவர்கள் மற்றும் குறைந்த இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களில் இந்த விளைவு அதிகமாகக் காணப்பட்டது. சல்போராபேன் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. சில குறிப்பிட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களுக்கு இது சிறப்பாகச் செயல்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது.

ப்ரோக்கோலியில் உள்ள வியத்தகு நன்மைகள்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், ப்ரோக்கோலியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சல்ஃபோராபேன், அதிக அளவு உட்கொண்ட நீரிழிவு நோயாளிகளில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் மீது நேர்மறையான விளைவை ஏற்படுத்தியது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.  நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது உடலின் இன்சுலின் உற்பத்தியில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது.

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள், நீரிழிவு நோயின் முந்தய நிலையில் இருக்கின்றனர்.  இருப்பினும், இதற்கு தெளிவான சிகிச்சை எதுவும் இல்லை. ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் இந்தப் பிரச்னையை அடையாளம் காண முடியாது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தனிப்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். சல்ஃபோராபேன் அடிப்படையிலான சிறப்பு உணவுமுறைகள் எதிர்காலத்தில் இந்த சிகிச்சைகளுக்கு பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்த சர்க்கரை அளவு உடலில் ஏற்படுத்தும் விளைவுகள்

ப்ரோக்கோலி மூலம் சல்ஃபோராபேன் பெறுவது மட்டுமே சரியான வழி அல்ல. உடற்பயிற்சி, எடை கட்டுப்பாடு மற்றும் சீரான உணவு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் எப்போதும் மிகவும் முக்கியம். இந்த ஆய்வின் முடிவுகள் சர்க்கரை கட்டுப்பாட்டில் பல புதிய மாற்றங்களைக் காட்டின. இது நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உடலின் வளர்சிதை மாற்றம், மலச்சிக்கல் மற்றும் நமது செரிமான மண்டலத்தில் உள்ள குடல் அமைப்புகள் ஆகியவை நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் அவை தெளிவாகக் காட்டுகின்றன.