Monsoon Season Diseases: மழைக்காலத்தில் படையெடுக்கும் இந்த நோய்கள்.. வராமல் தடுப்பது எப்படி..?
Monsoon Health Tips: மழைக்காலம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். டெங்கு, மலேரியா, பூஞ்சைத் தொற்று, டைபாய்டு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற 5 பொதுவான நோய்களின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வெயில் காலம் முடிந்ததும் வரும் மழைக்காலமானது (Monsoon Season) நமக்கு வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், மழைக்காலம் வந்ததும் உடன் பல நோய்களையும் (Illnesses) கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் ஈரப்பதம், அழுக்கு மற்றும் நீர் தேங்குவதால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்களின் பரவல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, பல வகையான நோய்களின் அபாயம் நமக்கு அதிகரிக்கிறது. நீங்கள் தேவையாக நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த நோய்கள் நமக்கு கடுமையான பிரச்சனையை உண்டாக்கும். அந்தவகையில், மழைக்காலங்களில் ஏற்படும் 5 பொதுவான நோய்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
டெங்கு:
மழையால் சாலைகள் மற்றும் வீட்டின் முன்புறத்தில் தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் வேகமாக இனப்பெருக்கம் அடையும். குறிப்பாக டெங்குவை பரப்பும் ஏடிஸ் எகிப்தி கொசு வேகமாக உற்பத்தி ஆகும். இந்த டெங்குவால் அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, உடலின் மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி, தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் பிளேட்லெட்டுகள் குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இவற்றை எப்போது அசால்டாக எடுக்கக்கூடாது. இதைத் தவிர்க்க, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடாதீர்கள். கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள். முடிந்தவரை முழு கை ஆடைகளை அணியுங்கள்.
ALSO READ: மழைக்காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது ஆரோக்கியமானதா..? இதை கவனிப்பது முக்கியம்!




மலேரியா:
அசுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்யும் அனாபிலிஸ் கொசு கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், குளிர், வியர்வை, தலைவலி மற்றும் சோர்வு, வாந்தி அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, கொதிக்க வைத்த சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துங்கள். வீட்டின் கதவுகளை முடிந்தவரை மாலை நேரத்தில் பூட்டிவிடுங்கள். மாலையில் வெளியே செல்வதை முடிந்தவரை தவிருங்கள்.
பூஞ்சை தொற்று:
மழைக்காலத்தில் உடலில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் சருமத்துடன் தொடர்புடைய பூஞ்சை தொற்றுகள் அதிகரிக்கும். தோலில் சிவப்பு புள்ளிகள் அல்லது அரிப்பு, படர்தாமரை, அரிப்பு, கால் விரல்களில் பூஞ்சை வளர்ச்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றை வராமல் தடுக்க உடலை உலர வைக்கவும், தளர்வான மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும், பூஞ்சை எதிர்ப்பு பவுடர் அல்லது கிரீம் பயன்படுத்தவும்.
டைபாய்டு பிரச்சனை:
டைபாய்டு என்பது அசுத்தமான நீர் மற்றும் உணவினால் ஏற்படும் தொற்று ஆகும். இது சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாவால் உண்டாகிறது. இந்த நிலையில், லேசான அல்லது அதிக காய்ச்சல், பலவீனம் மற்றும் பசியின்மை, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் நீண்ட காலத்திற்கு ஏற்படலாம். இதைத் தடுக்க, கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்கவும், வெளியே உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும், அடிக்கடி கை மற்றும் கால்களை சுத்தப்படுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
வைரஸ் காய்ச்சல்:
மழைக்காலங்களில் வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக வைரஸ் தொற்றுகள் பொதுவானவை. அறிகுறிகளில் லேசானது முதல் அதிக காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடல் வலி, சோர்வு ஆகியவை அடங்கும். இவை வராமல் தடுக்க மழையில் நனைவதைத் தவிர்க்கவும், நீங்கள் நனைந்தால், உடனடியாக உடைகளை மாற்றவும், சூடான, லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ணவும், போதுமான ஓய்வு எடுக்கவும்.
ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.. தினம் தினம் ஆரோக்கியம் தரும்!
மழைக்காலத்தில் பல உடல்நல சவால்கள் ஏற்படும். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், அலட்சியமாக விட வேண்டாம், உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியான தகவல் மற்றும் சிறிது எச்சரிக்கையுடன், இந்த நோய்களிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கலாம்.