தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. 3 முக்கிய தொகுதிகளில் சூறாவளிப் பரப்புரை.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?
Tamilnadu Assembly Election: தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி
Tamilnadu polls 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான ராகுல் காந்தியின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி (சனிக்கிழமை) ராகுல் காந்தி தமிழகத்தில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவர் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூர் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
அதோடு, அந்தசமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி சில இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என்றும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் போன்ற மாநிலத் தலைவர்களும் அவருடன் பிரசாரத்தில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
தமிழகத்தைப் புறக்கணிக்கிறாரா ராகுல்?:
தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ராகுல் காந்தியின் வருகை தாமதமாவது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தமிழகத்தில் பலமுறை ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திய நிலையில், ராகுல் காந்தி இப்போதுதான் தமிழகத்திற்கு வருவது அவர் “தமிழகத்தைத் தேர்தல் களத்தில் இரண்டாம் பட்சமாகப் பார்க்கிறாரோ?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு முன்னுரிமை?:
ராகுல் காந்தி கேரளா (வயநாடு) மற்றும் வடமாநிலத் தேர்தல்களில் காட்டும் ஆர்வத்தைத் தமிழகத்தில் காட்டவில்லை என்றும், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், இதுவரை முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி பிரசார மேடைகளில் தோன்றாதது, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் சலசலப்பு உள்ளதா? என்ற விவாதத்தையும் கிளப்பியது. இருப்பினும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த பரப்புரை:
ராகுல் காந்தி பிரசாரம் செய்யவிருக்கும் மூன்று தொகுதிகளுமே காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிடும் ‘கௌரவத் தொகுதிகள்’ஆகும். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “அரசியலில் நீங்கள் லாலிபாப் சாப்பிடும் பேபி”.. முதல்வர் ஸ்டாலின் முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரேமலதா..
குறிப்பாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் இந்தப் பயணம், அவர் மீதான “புறக்கணிப்பு” விமர்சனங்களுக்குப் பதில் தருமா அல்லது வெறும் கடமைக்கான பயணமாக அமையுமா என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியும்.