த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..
TVK Conference Resolution: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற்றது. அதில், பரந்தூர் விமான நிலையம், ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மீனவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தவெக மாநாடு
மதுரை, ஆகஸ்ட் 21, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர். அதேபோல், தலைவர் விஜயும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக, “கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக” என்று மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு தலைவர் என்றால் நல்லவனா கெட்டவனா என்பதை பார்க்க வேண்டாம்; உண்மையானவனா என்பதைப் பார்ப்பதே முக்கியம்” எனவும் குறிப்பிட்டார். அதேபோல், “2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். ஆதாயத்திற்காக நான் அரசியல் கட்சியை தொடங்கவில்லை. மக்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். இனி மக்கள் சேவை செய்வதே என் கடமை” என அவர் உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
பரந்தூர் விமான நிலையம்:
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 21, 2025
பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்:
சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான தேர்தல்தான் என்பதால், அதனை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் படிக்க: எல்லா சினிமாக்காரனும் முட்டாள் அல்ல.. த.வெ.க மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி கதை..
மீனவர்கள் பிரச்சினை:
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறிவரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆணவக் கொலைகள்:
ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தபோதும், திமுக அரசு அதை உள்நோக்கத்துடன் நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என மாநாடு வலியுறுத்தியது. அனைத்து சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் படிக்க: 234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி – த.வெ.க மாநாட்டில் தலைவர் விஜய் வைத்த டிவிஸ்ட்..
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு:
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். சட்டம், ஒழுங்கு அடியோடு சரிந்து விட்டது. இதற்குக் காரணம் திறமையற்ற, கபட நாடக திமுக அரசு என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அரசு வேலைவாய்ப்பு – அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு:
காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பாமல், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும். தற்போது டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறைந்து வரும் நிலையில், இது இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவை தகர்த்துவிடும் பேராபத்தாகும். எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட்டு, தமிழ்மூலக் கல்வி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அரசு பணியிடங்களை நேர்மையான முறையில் நிரப்ப வேண்டும்.