EPFO : PF பணத்தை UPI & ATM மூலம் எடுக்கலாம்.. விரைவில் அமலுக்கு வரும் அசத்தல் அம்சம்.. முக்கிய தகவல்!
PF Money Withdrawal Through UPI and ATM | பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சக இணையதளம் அல்லது உமாங் செயலி மூலம் விண்ணப்பித்து பணம் வருவதற்காக ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். அதனை எளிமையாக்க தான் அரசு யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) கணக்கு வைத்துள்ள பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட புதிய அம்சம் தான் யுபிஐ (UPI – Unified Payment Interface) மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் முறை. இந்த அறிவிப்பு வெளியானது முதலே உறுப்பினர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தற்போது அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வரும் இபிஎஃப்ஓ
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்கான அமைப்பாக உள்ளது தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்ட அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
அவ்வாறு பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விரும்பும் நபர்கள் முதலில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் சரிபார்ப்புக்கு பிறகு 2 முதல் 3 நாட்களுக்குள்ளாக பணம் உறுப்பினரின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். பிஎஃப் பணத்தை எடுக்க குறைந்தது 3 நாட்கள் வரை ஆகும் நிலையில், அதனை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டது. அது தொடர்பான முக்கிய அப்டேட் தான் தற்போது வெளியாகியுள்ளது.
யுபிஐ, ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல் – வெளியான முக்கிய தகவல்
பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில், பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எடுக்கும் நடைமுறை 2025, ஜூன் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு வைத்துள்ள சுமார் 7.5 கோடி உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.