இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்: 25% கூடுதல் சுங்கவரி ரத்து.. முக்கிய அம்சங்கள் என்ன?
India-US Trade Deal Points: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதி செய்துள்ளதாக அந்த உத்தரவின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன.

கோப்பு புகைப்படம்
புதுடெல்லி: இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் இணைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. ரஷ்ய எண்ணெய் வாங்கியதன் காரணமாக இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் சுங்கவரி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்தியப் பொருட்களுக்கான சுங்கவரியை 18 சதவீதமாக குறைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இந்தியா எரிசக்தி பொருட்களை வாங்கும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் புதிய கட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை முதல் புதிய வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் சுங்கவரியை இந்தியாவும் நீக்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம், முந்திரி, பாதாம், பழவகைகள், சோயாபீன் எண்ணெய், வைன், மதுபானங்கள் உள்ளிட்ட உணவு மற்றும் வேளாண் பொருட்களின் இறக்குமதி சுங்கவரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குள் 50,000 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆரஞ்சு, பிளம், திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம் ஆகியவற்றின் மீதான வரிகளில் இந்தியா தளர்வு வழங்காது. இந்திய அரிசி இறக்குமதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து ரப்பர், பிளாஸ்டிக், துணிகள், தோல், காலணிகள், மருந்துகள், விமானப் பாகங்கள், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.